கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, விளக்க மறியல்




சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய லொறியை விடுவிப்பதற்கு 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று (31) உத்தரவிட்டார். 

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்தபோது பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். 

இதன்போது லொறியை கைவிட்டுவிட்டு லொறி உரிமையாளர் உட்பட மண் ஏற்றியவர்கள் தப்பியோடியுள்ளதையடுத்து பொலிஸார் லொறியை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் 

இந்த நிலையில் லொறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து லொறியை மீட்பதற்கு முயற்சித்த போது அவர்களிடம் 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக தருமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோரியுள்ள நிலையில் லொறி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு இதனை தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் நேற்று மாலை 5.35 மணியளவில் லொறி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர். 

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று (31) ஆஜர்படுத்தியபோது இவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

இதேவேளை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்குள் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 4 பொலிஸார் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.