சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் குடியரசு தினம் (ஜனவரி 26) போன்ற முக்கிய நாட்களின்போது, குர்தா-பைஜாமா அணிந்து, தலையில் தொப்பியும் கையில் இந்தியக் கொடியையும் வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதை காணமுடியும்.
பொதுவாக இந்த புகைப்படங்களில் காணப்படுவது மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மதரஸாக்கள் இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் என்று கருதப்படுகிறது. இருந்தாலும், பல மதராசங்களில், இந்தி, ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பல்வேறுவிதமான மதரஸாக்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாதான் அனைத்திலும் பெரியது.
அங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் குடியரசு தினநாள் மற்றும் அதை அடுத்து வரும் விடுமுறை தினத்தன்று பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று தாரூல் உலூம் தேவ்பந்த் மதரஸா அறிவுறுத்தியது.
குடியரசு தினத்தன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருப்பதால், அச்சமான சூழல் நிலவும். அதனால் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்லவேண்டும்; வெளியில் சென்றாலும் யாருடனும் அதிகம் பேச வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மதரஸாக்களில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடப்படுவதில்லை, தேசியக் கொடி ஏற்றப்படுவதில்லை, அதற்கு காரணம் என்ன என்ற கேள்விகளும் பல முறை எழுப்பப்பட்டுள்ளன. இதுபோன்ற தேசிய விடுமுறை தினங்களில் மதரஸாக்களுக்கு விடுமுறையும் விடப்படுவதில்லை.
ஆனால் மதரஸாக்களில் தேசியக் கொடி ஏற்றப்படுவதை கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அரசு கட்டாயமாக்கியது. தற்போது, மதரஸாக்களில் ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறைகளை குறைக்க வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
சரி, குடியரசு தினத்தன்று மதரஸாக்களில் என்னதான் நடக்கிறது? அன்று மதரஸா மாணவர்கள் வெளியில் சென்றால் துன்புறுத்தப்படுவார்களா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தேடுவதற்காக சில மதரஸாக்களுக்கு சென்றோம்.
குடியரசு மதரஸாக்களில் என்ன நடக்கிறது?
வடகிழக்கு டெல்லியில் உள்ள முஸ்தஃபாபாத் பகுதியில் உள்ள பெரிய மதரஸாக்களில் ஒன்று, மதரசா அஷ்ரஃபியா தாலிமுல் குரான் தேவ்பந்துடன் இணைந்தது. இங்கு, சுமார் 350 குழந்தைகள் படிக்கின்றனர். அதில் 32 மாணவர்கள் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த மதரசாவில், நஜ்ரா, ஹீஃப்ஸ் மற்றும் கிராத் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இங்கு படிப்பு முடிந்ததும், மாணவர்கள் மேற்படிப்புக்காக வேறு மதரஸாக்களுக்கும், தேவ்பந்துக்களுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.
குடியரசு தினத்தை ஒட்டி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று 1990களில் இருந்து இந்த மதரஸாவை நிர்வகிக்கும் காரி அப்துல் ஜப்பார் ஒப்புக்கொண்டார்.
தேவ்பந்துவிடம் இருந்து எந்தவிதமான பரிந்துரையும் வரவில்லை என்று கூறும் அவர், ஆனால் இந்த உறைவிடப் பள்ளி மாணவர்களின் பொறுப்பு மதரஸா நிர்வாகத்தினுடையது. எனவே அவர்கள் வெளியே செல்ல விரும்பினால் அதைப் பற்றி முதலில் மதரசாவுக்கு தெரிவிக்க வேண்டும், பிறகு அனுமதியுடன் தான் அவர்கள் வெளியே செல்லமுடியும்.
"சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில்மதரஸாக்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்களின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கூறப்பட்டிருக்கிறது அப்போது, 'சாரே ஜஹான் சே அச்சா' பாடல் பாடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
14 வயது சிறுவன் முகமது ஜைத், மீரட்டை சேர்ந்தவன், இந்த மதரஸாவில் உருது மற்றும் அரபிய மொழிகளை படிக்கிறான். ஆகஸ்ட் 15க்கு அங்கு என்ன நடக்கும் என்று கேட்டால், பட்டம் விடுவோம் என்று பதிலளித்தான்.
இதுபோன்ற நாட்களில் தான் மதரஸாவிலேயே இருப்பதாகவும், தனது நண்பர்களில் சிலர் வெளியே செல்வார்கள் என்றும் முகமது ஜைத் கூறினார்.
சரி, குடியரசு தினம், சுதந்திர தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது இங்குள்ள மாணவர்களுக்கு தெரியுமா என்பதை தெரிந்துக் கொள்ள விரும்பினோம்.
இதே மதராசவில் படிக்கும் முகமது சாஹில் கான் என்ற 19 வயது இளைஞன், சுதந்திர தினத்தைப் பற்றி தெரியும் என்று கூறினார். ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் நம் நாடு விடுதலை அடைந்தது என்று கூறும் சாஹில், தங்கள் மதரசாவில் அன்று கொடியேற்றப்படுவதாக கூறினார்.
வெளியே செல்லும் மதரஸா மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறதா?
முஸ்தஃபாபாதில் பரேல்வி பிரிவை சேர்ந்த மதரசா இஸ்லாமியா ஹுசைனியா நூரியா இருக்கிறது. வெளியூரைச் சேர்ந்த 30 மாணவர்கள் இங்கு தங்கி படிக்கிறார்கள்.
இந்த மதரஸாவுக்கு சென்றிருந்தபோது, குடியரசு தினத்திற்காக தேசியக் கொடிகள் முன்னரே வரவழைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. மதரஸாவின் பொறுப்பாளர் மெளலானா ஹசீப்-உர்-ரஹ்மான், மாணவர்கள் குடியரசு தினத்தன்று வெளியே செல்வதை தடுக்கும் தேவ்பந்த் மதரஸாவின் நிர்வாகியின் கருத்தில் இருந்து மாறுபடுகிறார். மாணவர்கள் வெளியே செல்வதில் தவறேதும் இல்லை, ஆனால் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்.
அச்சத்தை ஏற்படுத்த விரும்பும் சிலர் இருப்பதாக குறிப்பிடும் அவர், மாணவர்கள் குடியரசு தினத்தன்று மட்டும் அல்ல, எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று மதரசாவில் என்ன நடக்கிறது? என்று அவரிடம் கேட்டோம். "இதுபோன்ற நாட்களில் மதரஸாவில் கொடி ஏற்றுவோம். மாணவர்களுக்கு அந்த நாளின் முக்கியத்துவத்தையும், வரலாற்றுச் சிறப்பையும் எடுத்துக் கூறுவோம்" என்று அவர் பதிலளித்தார்.
இந்த மதரஸாவில் படிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிஹித் அக்தர் என்ற மாணவர், குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இந்த நாளில் நமது நாட்டின் சட்டம் (அரசியலமைப்பு சாசனம்) நடைமுறைப்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
"யோம்-இ-ஜம்ஹுரியா (குடியரசு தினம்) தினத்தன்று நான் மதரஸாவில் இருந்து வெளியே செல்கிறேன், எந்தவிதமான அச்சமும் எனக்கு ஏற்பட்டதில்லை. இந்த குடியரசு தினத்திற்கும் வெளியே செல்வேன்" என்று அவர் சொல்கிறார்.
உத்திரப் பிரதேச மாநிலம் லோனியை சேர்ந்த முகமது ஷாஹ்ஜாதிடம் பேசினோம். தனக்கு வெளியில் செல்ல எப்போதும் எந்தவித அச்சமும் இருந்ததில்லை என்றும், இந்த ஆண்டும் வெளியில் சென்று சுற்றிவிட்டு வருவேன் என்று அவர் கூறினார்.
ரம்ஜானுக்கு பொருட்களை வாங்குவதற்காக 2017 ஜூன் மாதம் டெல்லிக்கு வந்துவிட்டு, ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த பல்லப்கட் என்ற ஊரைச் சேர்ந்த 16 வயது இளைஞன் ஜுனைத் சக பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டான். ஜுனைத்துக்கும், சக பயணிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறி இறுதியில் அது அவரது உயிரை பறித்துவிட்டது.
ஜாஃபராபாதில், பாபுல் உலூம் என்ற மதரஸாவில் வெளியூரைச் சேர்ந்த 250க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். அதில் ஒருவர் ஹரியானாவை சேர்ந்த 15 வயது சிறுவன் அப்துல்லா. குர்தா-பைஜாமா, தொப்பி அணிந்து வெளியே செல்லும்போது தன்னை பிறர் வித்தியாசமாக அணுகுவதாக அப்துல்லா சொல்கிறார்.
"மெட்ரோவில் பயணிக்கும்போது, தொப்பி போட்டிருப்பதை பார்த்ததும், எங்கிருந்து வந்தாய் என்று கேட்பார்கள். வேண்டுமென்றே தேவையில்லாத கேள்விகளை கேட்டு, எங்கள் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்குவார்கள். இருக்கையில் உட்கார்ந்திருந்தாலும், பலமுறை என்னை எழுப்பி விட்டிருக்கிறார்கள். குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று மதரஸாவிலேயே இருப்பேன். அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். இதுவரை அந்த தினங்களில் நான் வெளியில் சென்றதுமில்லை, இனிமேலும் செல்லமாட்டேன்" என்று அப்துல்லா சொன்னார்.
எங்களின் நாட்டுப்பற்று மீது சந்தேகம் ஏன்?
"பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றிப் பெற்றால் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை, அவர்கள் பாகிஸ்தானையே விரும்புகிறார்கள்" என்பது போன்ற வாட்ஸ் ஏப் செய்திகளையோ, அல்லது யாராவது பேசிக் கொள்வதையோ நீங்கள் பார்த்திருக்கலாம்.
முஸ்லிம்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்றால் வேறு யாருக்கு அதிக நாட்டுப்பற்று இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார், பாபுல் உலூம் மதரஸாவின் தலைமை ஆசிரியர் மெளலானா முகமது தாவூத்.
"தேவ்பந்த் மற்றும் அதனுடன் இணைந்துள்ள அனைத்து மதரஸாக்களிலும் வெகு காலத்திற்கு முன்பிருந்தே சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் நடைமுறை அமலில் இருக்கிறது. எந்த இடத்தில் வசிக்கிறாயோ அந்த இடத்தை நேசி என்பதுதான் எங்கள் ரசூல் முகமது சாஹபின் கூறியிருக்கிறார். தேவைப்பட்டால் நாட்டை காப்பதற்காக எல்லைக்கு சென்று போராடவும், உயிர்த் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு நாட்டுப்பற்று இருக்கிறது என்று சான்றிதழ் ஒன்றை தூக்கிக்கொண்டு திரிய வேண்டிய அவசியம் இல்லை" என்று அவர் தெளிவாக சொல்கிறார் மெளலானா முகமது தாவூத்.
நாட்டிற்காக உயிரையும் கொடுப்போம்
இருந்தாலும், நாட்டில் கடந்த 4-5 ஆண்டுகளாக வெறுப்புணர்வு சூழல் நிலவுவதாகவும், அது ஒரு சிலரால் பரப்பப்பட்டுவருகிறது என்றும் மெளலானா முகமது தாவூத் சொல்கிறார்.
"நாட்டில் 95% மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வெறுப்புணர்வு பரப்புபவர்களின் எண்ணிக்கை 90 சதவிகிதமாக மாறிவிட்டால், நாங்கள் இங்கு வசிப்பதே சிக்கலாகிவிடும்" என்று அவர் சொல்கிறார்.
மெளலானா முகமது தாவூத்தின் கருத்தையே மெளலான ஹசீப்பும் வழிமொழிகிறார். தங்கள் முன்னோர்களும் இந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் என்னும்போது, தாயகத்தை விட்டு, பிற நாட்டை எப்படி நேசிப்போம் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
"இந்த நாட்டிற்காக நாங்களும் உழைக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு இடங்களில் எனது தாடி மற்றும் ஆடை தொடர்பாக மோசமாக நடத்தப்பட்டேன். ஆனால், எந்தவொரு சமயத்திலும் நாட்டிற்கு துரோகம் செய்வது என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது, நான் இந்த நாட்டில்தான் வசிப்பேன்" என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் மெளலான ஹசீப்.
2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி தலைமையில் பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு பசுவதை என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் செய்வது அதிகரித்தது. பலர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இதுபற்றி கேட்டதற்கு பதிலளிக்கும் காரி அப்துல் ஜப்பார், "எப்போதுமே உன் அரசனைப் பற்றி தவறாக சொல்லாதே" என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார் என்று சமயோசிதமாக பதிலளித்தார்.
Post a Comment
Post a Comment