மீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்!




“நாம் எதிர்பார்த்த மாதிரி மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் தனிவழியில் சென்று மீண்டும் ஓர் அரசியல் சூழ்ச்சி ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற இரகசியத் திட்டம் வகுக்கின்றனர். இந்தத் தகவல் வெளியில் கசிந்துள்ளது. எனினும், இந்த அரசியல் சூழ்ச்சியையும் நாம் வெற்றிகரமாக முறியடிப்போம்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“சர்வாதிகாரப் போக்குடைய ராஜபக்ஷ அணியினர் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற நாம் ஒருபோதும் இடமளியோம். அவர்களின் திட்டங்களை முளையிலேயே கிள்ளிவிடுவோம்.
அதிகார வெறி பிடித்தவர்கள் – பதவி ஆசை பிடித்தவர்கள் வெட்கம் இன்றி ஜனநாயகத் தீர்ப்புக்கு முரணாக – குறுக்கு வழியில் – திருட்டுத்தனமாக ஆட்சியைப் பிடிக்க முயல்வது வழமை. அவர்களுக்கு தோல்வி என்பது சகஜயமாகிவிடும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சி, தடைகளைத் தகர்த்தெறிந்து தொடரும். எமது ஆட்சியை எவரும் இனிமேல் கவிழ்க்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ எந்தத் தேர்தலையும் அரசமைப்பு விதிமுறைகளுக்கமைய எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.
அனைத்துத் தேர்தல்களிலும் நாமே வெற்றிவாகை சூடுவோம். நாட்டு மக்கள் உண்மை நிலையைப் புரிந்துவிட்டார்கள். அவர்கள் எமது பக்கமே நிற்கின்றார்கள்.
‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ மாதிரி மீண்டும் ஓர் அரசியல் சூழ்ச்சி அரங்கேறினால் நாம் மட்டுமல்ல நாட்டு மக்களே அணிதிரண்டு முறியடிப்பார்கள்.
ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியை முறியடித்ததில் நாட்டு மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு” – என்றார்.