சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு




மட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. 

1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவையானது இலங்கையின் முன் மருத்துவ மனை பராமரிப்பு அம்புலன்ஸ் சேவைகளின் முன்னோடியாகக் காணப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை அரசால் தற்பொழுது மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவையினை நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதற்காக அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் 650 பேரும் அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் 650 பேரும் நாட்டிலுள்ள மாவட்டச் செயலகங்களினூடாக இடம்பெறும் நேர்முகப்பரீட்சை மூலம் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.



அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நேர்முகப்பரீட்சை அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர், அம்புலன்ஸ் வண்டி சாரதி பதவிகளுக்காக 2019.01.19 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அவசர மருத்துவ தொழில் நுட்பவியலாளர் – 650 பேர், அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் – 650 பேர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், கீழ்காணும் தகைமையுடைய 35 வயதுக்குட்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்



க.பொ.த உ/த உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் சித்தி அல்லது வேறு பாட பிரிவில் சித்தியுடன் தாதியர் அல்லது சுகாதாரம் சார்ந்த துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளோமா, ஆங்கிலத்தில் சிறப்புத் தேர்ச்சி, மாறுபட்ட நேரங்களில் பணியாற்ற விளைதல், குழுவாக தொழிற்படக்கூடிய நேர்மறை எண்ணங்களுடையவராயிருத்தல், அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளராக முன் அனுபவம் பெற்றிருத்தல் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.

அம்புலன்ஸ் வண்டி சாரதிகள்

க.பொ.த. சா/த சித்தி, கணரக வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல், இத் தொழிலில் குறைந்தது 2 வருட அனுபவம், மாறுபட்ட நேரங்களில் பணியாற்ற விளைதல், குழுவாக தொழிற்படக்கூடிய நேர்மறை எண்ணங்களுடையவராயிருத்தல்.

உள்ளிட்ட தகுதிகளையுடையவர்கள் நேர்முகப்பரீட்சையில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.