கடந்த சில தினங்களாக #10YearChallenge என்ற பிரசாரம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, இந்த பிரசாரத்தில் பங்குகொள்பவர்கள் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தையும், இந்தாண்டு அதாவது 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சேர்த்து (கொலாஜ் செய்து) தங்களது பக்கத்தில் வெளியிட வேண்டும்.
இந்தியாவை சேர்ந்தவர்கள், சாதாரண ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் என எவ்வித வரையறையுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது புகைப்படத்தை #10YearChallenge என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தால் பல கோடி பயன்பாட்டாளர்களின் முகமாற்ற அடையாளம் சார்ந்த தரவுகளை திரட்டி, முகமறிதல் தொழில்நுட்பத்தை (Facial Recognition) மேம்படுத்திக் கொள்வதற்கு செய்யப்படும் சூழ்ச்சிதான் இந்த பிரசாரம் என்றும் இதன் காரணமாக பயனர்களின் அந்தரங்க தகவல்கள் பறிபோவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
எனவே, ஃபேஸ்புக் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் அளிக்கும் பதிலென்ன? உண்மையிலேயே இதுபோன்ற புகைப்படங்களின் மூலம் தரவுகளை திரட்ட முடியுமா? அதன் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும்? இதிலிருந்து விடுபடுவதற்கான வழி என்ன? இதுகுறித்த வல்லுனர்களின் கருத்துகள் என்ன? போன்றவற்றை இந்த கட்டுரை அலசுகிறது.
குற்றச்சாட்டு என்ன?
எப்படி குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியையோ, பாடத்தையோ அடிப்படையிலிருந்து பயிற்றுவிக்குறோமோ, அதேபோன்று ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையோ, மென்பொருளையோ அல்லது செயலியையோ உருவாக்கும்போது அது சார்ந்த தரவுகளை கணினியில் நாம் பதிவிட வேண்டியது அவசியம்.
- உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா?
- பப்ஜியின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் என்ன?
அந்த வகையில், ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய முகமறிதல் (Face Recognition) தொழில்நுட்பத்தின் அலாக்ரிதத்தை மேம்படுத்துவதற்கு தேவையான தரவுகளை பெறுவதற்கு அந்நிறுவனம் இந்த பிரசாரத்தை ரகசியமாக முன்னெடுப்பதாகவும் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த தரவுகளை கொண்டு ஒருவர் அடுத்த பத்தாண்டுகள் கழித்து எப்படி இருப்பார் என்ற யூகத்தை ஃபேஸ்புக் தனது மென்பொருளை கொண்டு கண்டறிந்து, அதை அழகு சார்ந்த காப்பீடு வழங்கும் நிறுவனங்கள், அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும், வாடிக்கையாளர்களை மையாக கொண்ட விளம்பரங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இவ்வாறு மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை அரசாங்கங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விற்பதன் மூலம் புதியதொரு தொழில் முறையை உருவாக்கி அதில் கோலூச்சுவதற்கு ஃபேஸ்புக் முயல்வதாகவும் மேலும் கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் என்ன சொல்கிறது?
இந்த விவகாரம் குறித்து வொயர்ட் நிறுவனத்தின் ஆசிரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், "இந்த 10 வருட மீம் பிரசாரம் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களாலேயே உண்டாக்கப்பட்ட ஒன்று, இதற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஃபேஸ்புக்கை பயன்பாட்டாளர்கள் எப்படி வேடிக்கையாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு, அவ்வளவுதான்" என்று கூறியுள்ளது.
ஃபேஸ்புக் தனது நிறுவனம் குறித்த சர்ச்சைக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு இந்த பதில் பதிவின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கருதப்பட்டாலும், இந்த பிரசாரத்தில் பங்கேற்றவர்களிடையே இதுகுறித்த அச்சமும், பல்வேறு கேள்விகளும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
எப்படி செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம்?
ஃபேஸ்புக்கின் முகமறிதல் தொழில்நுட்பத்திற்கான தரவு திரட்டுதல் சென்ற வாரமோ, இன்றோ தொடங்கிய ஒன்றில்லை, இது கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது என்பதே உண்மை.
ஆம், உங்களது ஃபேஸ்புக் கணக்கிலுள்ள அனைத்து புகைப்படங்களும் ஏற்கனவே அந்நிறுவனத்தால் ஸ்கேன் செய்யப்பட்டு, அதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் குறியீடுகளாக சேமிக்கப்பட்டுள்ளது.
உங்களது புகைப்படத்தையோ அல்லது நண்பர்களுடனான புகைப்படத்தையோ ஃபேஸ்புக்கில் பதிவேற்றும்போது அது தானாகவே அவர்களது பெயர்களை பரிந்துரைக்கும் அல்லது நீங்கள் இருக்கும் புகைப்படத்தை உங்களது நண்பர்கள் வட்டத்தை சேர்ந்த ஒருவர் பகிர்ந்தால் அதுகுறித்த செய்தியை உங்களுக்கு அளிக்குமல்லவா? ஃபேஸ்புக் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்திய முகமறிதல் தொழில்நுட்பம்தான் இது அனைத்திற்கும் காரணமாக உள்ளது.
எனினும், இந்த தொழில்நுட்பத்தை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் பயன்படுத்த முடியுமென்று தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை கொண்டு புகைப்படங்கள் மட்டுமல்லாது காணொளிகளும் ஆராயப்படுவதாகவும், ஒருவரது ஃபேஸ்புக் கணக்கை ஒத்து காணப்படும் போலிக் கணக்குகளை அடையாளம் காண்பதற்கும் இது பயன்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
#10YearChallenge பிரசாரத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் உங்களது புகைப்படங்களை பயன்படுத்தி தரவுகளை திரட்டுகிறதா என்பது விவாதமாக இருந்து வரும் வேளையில், இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் தப்பிப்பதற்கு மிகவும் எளிமையான வழி ஒன்றுள்ளது.
ஒவ்வொரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளரும் முகமறிதல் தொழில்நுட்பத்திற்காக தனது புகைப்படத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்துவதை தடுக்க முடியும்.
அதற்கான வழிமுறையை காண்போம்.
- உங்களது ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழையுங்கள்.
- வலது மூலையிலுள்ள செட்டிங்ஸுக்குள் செல்லுங்கள்.
- செட்டிங்ஸ் பகுதியின் இடதுபுறத்திலுள்ள "Face Recognition" என்பதை தேர்ந்தெடுங்கள்.
- கடைசி படியாக, "ஃபேஸ்புக் உலாவும் புகைப்படம், காணொளியில் உங்களை அடையாளம் காண்பதற்கு விருப்பமா?" என்ற தெரிவிற்கு "இல்லை" என்று குறிப்பிடுங்கள்.
மேற்கண்ட செயல்பாட்டை மேற்கொள்வதன் மூலம், உங்களை பற்றிய தரவுகள் ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்படுமென்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
"போராட்டக்காரர்களை ஒடுக்க பயன்படும்"
"மக்கள் தொகை பெருக்கம் அபரிதமான வளர்ச்சியை அடையும்போது ஒரு நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறுவதை போன்றே, மின்னணு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் மனிதகுலத்துக்கு மிகப் பெரிய சவாலாக உருவாகியுள்ளது.
அந்த வகையில் ஒருவரது முகத்தை (முகமறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி) கொண்டே கைபேசியை திறப்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முன்னேறி வரும் காலத்தில் #10YearChallenge போன்றவற்றில் பதிவிடப்படும் புகைப்படங்கள் ஒருவரது அந்தரங்க தகவலுக்கே பாதிப்பை உண்டாக்கலாம்" என்று எச்சரிக்கிறார் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் தலைமை செயலதிகாரியான கார்த்திகேயன் வீரன்.
"#10YearChallenge விவகாரத்தை பொறுத்தவரை ஃபேஸ்புக் இதை தொடங்கியதா, இல்லையா என்று யோசிப்பதைவிட, பொதுத்தளத்தில் பதியப்படும் இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்பதை நாம் உணர வேண்டும். அதாவது, உலகம் முழுவதும் 100 கோடி பேர் இந்த ஹேஸ்டேகை பயன்படுத்தி புகைப்படங்களை பதிவேற்றியதாக வைத்துக்கொள்வோம்.
அவை அனைத்தையும் வெறும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் தரவிறக்கம் செய்துவிட முடியும். பிறகு அதை நல்ல விதத்தில் பயன்படுத்துவதும், தீமைக்கு பயன்படுத்துவதும் அந்த தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனத்தின் கையிலேயே உள்ளது" என்று அவர் விவரிக்கிறார்.
ஒருவேளை இந்த தரவுகள் தீமைக்காக பயன்படுத்தப்பட்டால் எவ்விதமான விளைவுகள் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்று அவரிடம் கேட்டபோது, "3டி பிரிண்டிங் மூலமாக உங்களது முகத்தை உருவாக்கிவிட்டு, கைபேசி உள்ளிட்ட முகத்தை கடவுச்சொல்லாக கொண்டு செயல்படும் கருவிகளை எளிதாக திறக்க முடியும்.
அதோடு மட்டுமில்லாமல், மிகப் பெரியளவில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கானோரை வெறும் ஒரு ட்ரோன் புகைப்படம்/ காணொளியின் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு" என்று கூறுகிறார் கார்த்திகேயன்.
"பத்து வருடங்களுக்கு முன்னர் பச்சைபசேல் என்று காட்சியளித்த உங்களது கிராமத்தின் இன்றைய நிலை, சுருங்கி வரும் நீர்நிலைகள், அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றின் மாற்றங்களையும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மக்கள் பதிவிட்டால் சமூகத்தில் பயனுள்ள மாற்றங்கள் ஏற்பட வழிகோலும்" என்று அந்தரங்க தகவல்களை இழப்பை விடுத்து இந்த பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பரிந்துரையை கார்த்திகேயன் வழங்குகிறார்.
Post a Comment
Post a Comment