(க.கிஷாந்தன்)
தோட்டத் தொழிலாளர்களை 1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மீட்டுத்தருமாறு கோரி 22.12.2018 அன்று மதியம் கொட்டகலை டிரேட்டன், யதன்சைட் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்னாள் அட்டன் நுவரெலியா பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு கொடிகளையும், பதாதைகளையும் ஏந்திய வண்ணம் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். இதனால் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பாதிப்புக்குள்ளாகின.
ஆர்ப்பாட்டக்காரர்களை திம்புள்ள பத்தனை பொலிஸார் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டபோது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள உயர்வு கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் ஒரு போதும் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கேட்கவில்லை. ஆனால் அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் அரசியல் இலாபம் கருதி ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருவதாக தெரிவித்தார்கள்.
அதனை நம்பி போராட்டங்களில் ஈடுபடுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். கடந்த பத்து நாட்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட செய்தார்கள். ஆனால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இப்போது அமைச்சுப் பதவிகளையும், அரசு பொறுப்புக்களையும் வாங்கிக்கொண்டு தங்களுடைய வேலைகளை கவனித்துக் கொண்டு மௌனம் காத்து வருகிறார்கள். ஆனால் எங்களது பிள்ளைகள் நாங்கள் படும் கஷ்டத்தை துன்பத்தை பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் எங்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு கோரி அவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
அரசாங்கமும் கம்பெனிகளும் அரசியல்வாதிகளும் எங்கள் மீது எவ்வித கவனமும் செலுத்தாது எங்களை வீதியில் கொண்டு வந்து விட்டுள்ளது. இனியும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது. எனவே எங்கள் பிள்ளைகளின் உயிரை காவு கொண்டு எங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் அவசியமில்லை. ஆகவே எங்கள் பிள்ளைகளை எவ்வித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு எடுக்காவிட்டால் நாங்கள் தொடர் இறுதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்போம் என எச்சரித்தனர்.
இந்த போராட்டம் காரணமாக நுவரெலியா அட்டன் ஊடான பிரதான போக்குவரத்து கொட்டகலை பகுதியில் தடைப்பட்டது. சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் வாகன நெரிசல் நிலையும் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் தொழிலாளர்களிடம் விடுத்த வேண்டுகோள் காரணமாக தொழிலாளர்கள் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
குறித்த போராட்டத்தில் யதன்சைட், டிரேட்டன் போன்ற தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment