(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தினமும் நோயாளர்களின் பணிவிடைகளை பார்த்து வரும் நபரொருவர் திருகோணமலை மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளார்.
இவர் ஆச்சரியமிக்க ஒரு புனித மனிதராகவும், புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து வருவதுடன் நோயாளர்களுக்கு தினமும் பனிவிடை செய்து வருவதாகவும் வைத்தியசாலைக்கு வருவதை வழக்கமாக்கியும் கொண்டுள்ளார்.
கடந்த இரண்டரை வருடங்களாக தினமும் வைத்தியசாலைக்கு வருவதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தேசிய நீர்வழங்கள், வடிகாலயமப்பு சபையில் பணிபுரியும் ஜமால்தீன் மொகமட் ராசிக் என்பவரே இந்த சமூக பணியில் ஈடுபட்டுள்ளவர்.
1978-79 களில் இடியப்பம் விற்று தனது குடும்ப வறுமையை போக்கிய இவர் இன்று தனது உழைப்பில் ஒரு பகுதியை நோயாளர்களுக்காக ஒதுக்கியுள்ளார்.
தினமும் காலை 7.00 முதல் 8.00 மணிவரை நோயாளர்களுக்கு சேவை செய்வதற்காவே நேரத்தை ஒதுக்கி அந்நேரத்தில் வேறு எந்த விடயத்திலும் ஈடுபடாதவர் எனவும் தெரியவருகின்றது.
நோயாளர்களை பார்வையிடும் நேரத்தில் இவரை ஏதாவதொரு வாட்டில் (களம்) நிச்சயம் காணலாம்.
இதேவேளை தான் சந்திக்கும் நோயாளர்களுடன் அன்பாக நலன் விசாரித்து ஆறுதல்கூறி இயலாமையிலுள்ள உதவியின்றி தவிக்கும் நோயாளர்களுக்கு உடைமாற்ற,மலசலகூடம் செல்ல உதவிசெய்தும், குளிப்பாட்டியும் வருகின்றார்.
கையில் பணமின்றி இருக்கும் பலருக்கு தேனீர்,உணவு போன்றவற்றை தானே சென்று வாங்கி வந்து கொடுத்து வருவதாகவும் இவர் செய்வது சாதாரணமாக ஓர் உறவினர் செய்யும் பணிவிடை போன்றே இருப்பதாகவும். மாற்று உடையின்றி அவதியுறுவோருக்கு தனது செலவில் நன்கொடையாக ஆடைகளை வாங்கி கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளர்களுக்கு செய்யும் சேவையை இறைவன் தனக்களித்த கடமையாக கூறும் இவர் 2017 மார்கழி 25 ம் திகதி ஒரு பாரிய வாகன விபத்தொன்றில் சிக்கிய போதும் சிதைந்த வாகனத்துள் சிறுகாயங்களின்றி மீண்டதை ஆச்சரியத்துடன் நினைவுபடுத்தும் இவர் தன்னை மனதாற வாழ்த்திய உள்ளங்களின் அன்புதான் இன்று தான் உயிர்வாழ காரணம் எனவும் குறிப்பிட்டார்.
வருடத்தின் ஒருநாள் கூட தனது சமூகப்பணியை விடாமல் செய்து வருவதாகவும் கடமை நிமித்தமோ, வேறு விடயத்திற்காகவோ வெளியூர் சென்றால் கூட தனது சேவையை தற்காலிகமாகவேனும் நிறுத்தியதில்லையெனவும் தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம்,கண்டி,கொழும்பு,
காத்தான்குடி,கலேவெல போன்ற இடங்களிலும் தனது சேவையை தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன,மத பேதமின்றி என்றுமே தனது மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தாத சிறந்த சேவையாளர் எனவும் தெரியவருகின்றது. .
Post a Comment
Post a Comment