வடக்கில் வெள்ளத்தில் சிக்கிய மீட்பு அதிகாரிகள்




இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ பணியில் ஈடுபடிருந்த அரச ஊழியர்கள் சிலர் வெள்ளத்தில் சிக்குண்ட சம்பவம் ஒன்று சனிக்கிழமை மாலை இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு தொடர்பான அனர்த்த முகாமைத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த அரச ஊழியர்களே வெள்ளத்தில் சிக்குண்டுள்ளனர்.
கடுமையான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய குளமான இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் சனிக்கிழமை காலை திறந்து விடப்பட்டது. இதனால் தாழ் நிலத்தை நோக்கிய நீர் வரத்து சடுதியாக அதிகரித்தது.
நீர் வரத்து சடுதியாக கூடியதால் கண்டவளை பிரதேச செயலகம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அங்கு கடமையிலிருந்த அரச ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறமுடியாத நிலை ஏற்பட்டது.



இலங்கை

பின்னர் வெள்ளத்தில் சிக்கிய அரச ஊழியர்களை கடற்படையினர், ராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியுடன் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் 2,788 குடும்பங்களை சேர்ந்த 9,161 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
மேலும், 1,829 குடும்பங்களை சேர்ந்த 5,775 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.