இலங்கையில் நடைப்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்க வேண்டுமானால் வெளிநாட்டு நீதித்துறையின் உள்நுழைவு அவசியம் என முன்னாள் நீதியரசரும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கேள்வி பதில் ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை தற்போது சிறந்த தீர்ப்புக்களைத் தரத்தொடங்கியுள்ளன. எனவே, உள்நாட்டு நீதிபதிகள் குழாம் யுத்தக் குற்ற விசாரணைகளை நடத்தலாம் என்றும் வெளிநாட்டு உள்ளீடல்கள் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு நீதியரசராக இருந்த உங்களின் கருத்து என்ன என்ற கேள்விக்கு பின்வருமாறு விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசர் நளின் பெரேரா அவர்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளார். ஆரம்ப நீதிமன்றங்களில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்தவர் அவர். பிரதம நீதியரசர் சன்சோனியின் பின்னர் தற்போதைய பிரதம நீதியரசரே முழுமையாக ஆரம்ப நீதிமன்றங்களில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்த ஒரு பிரதம நீதியரசர் ஆவார்.
பிரதம நீதியரசர் பரிந்த இரணசிங்க அவர்கள் குறுக்கு வழியில் பிரதம நீதியரசராக வந்தவர். அதாவது ஆரம்ப நீதிமன்றங்களின் நீதிபதியாக இருந்து மேல் வந்திருந்தாலும் அவருக்கு நீதி அமைச்சின் செயலாளர் பதவி அளிக்கப்பட்டு அங்கிருந்து பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர்.
அவர் உரியவாறு பதவி உயர்வு பெற்று உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் அவரால் பிரதம நீதியரசராக வந்திருக்க முடியாது. காரணம் சட்டத்துறைத் தலைமை அதிபதியின் திணைக்களத்தில் 15 - 20 வருடங்கள் அரசாங்கத்தின் நலனுக்காக வழக்குகள் பேசிவந்த அரச சட்டத்தரணிகள், உதவி சொலிசிற்றர் ஜெனரல் அல்லது உதவி மன்றாடியார்கள், மேலதிக மன்றாடியார்கள், மன்றாடியார்கள், சட்டத்துறைத் தலைமை அதிபதிகள் ஆகியோரே உயர் நீதித்துறைப் பதவிகளுக்குப் பெருவாரியாக இந் நாட்டில் நியமிக்கப்படுகின்றார்கள்.
பல ஜனநாயக நாடுகளில் அப்படி நியமனங்கள் இடம் பெறுவதில்லை. இவர்கள் வயதில் குறைந்தவர்கள் என்பதால் எளிதாக பிரதம நீதியரசர் நிலைக்கு வந்து விடுகின்றார்கள் அல்லது நேராகவே சட்டத் துறைத் தலைமை அதிபதி பிரதம நீதியரசராக நியமிக்கப்படுகின்றார்.
சிரேஸ்ட நீதியரசர் நாகலிங்கம் அவர்களை பிரதம நீதியரசர் ஆக்காது சட்டத்துறைத் தலைமையதிபதியாக இருந்த பஸ்நாயக அவர்கள் 1950 களிலேயே பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். ஆளுநர் நாயகமாகக் கூட பதில் நியமனம் பெற்ற நீதியரசர் நாகலிங்கம் பிரதம நீதியரசர் ஆக்கப்படவில்லை. அது தான் எமது சரித்திரம்.
நீதிபதிகளின் பின்னணி இல்லாதவர்களே சட்டத்துறைத் தலைமை அதிபதி திணைக்களத்தவர்கள். ஆரம்ப நீதிமன்றங்களில் நீதித்துறைப் பதவிகள் வகித்து பதவி உயர்வு பெற்று வந்தவர்கள் பொதுவாகவே மக்கள் நலம் பற்றி சிந்திப்பவர்கள். அவர்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் இருந்து மக்கள் சார்பாகத் தீர்ப்புக்களை வழங்கி வந்தவர்கள்.
அரசின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எந்த ஒரு கடப்பாடோ கருத்தோ கொண்டவர்கள் அல்ல. ஆனால் சட்டத்துறைத் தலைமை அதிபதியின் திணைக்களத்தில் இருந்து திடீரென மேன்முறையீட்டு அல்லது உச்ச நீதிமன்றங்களுக்குப் பதவி பெற்றுப் போகின்றவர்கள் தமது தொழில் வாழ்க்கை முழுவதிலும் அரசின் நலன்களைப் பாதுகாத்து வந்தவர்களே.
ஒரு பிரச்சினை எழும் போது அதனைத் தம்மை அறியாமலேயே அரச நிலையில் இருந்து பரிசீலிக்கப் பழக்கப்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து முழுமையாக மக்கள் நலம் சார்ந்த தீர்ப்புக்களை எதிர்பார்ப்பது கடினம்.
நீதியரசர்கள் என்ற முறையில் அவர்களுக்கு இரண்டு குறைபாடுகள் உண்டு. ஒன்று அனுபவம் பெற்று பதவி உயர்வு பெற்று நீதித்துறையிலிருந்து வருபவர்களிலும் பார்க்கக் குறைந்த வயதுடையவர்கள் இவர்கள். அடுத்தது அவர்கள் நீதிபதி ஒருவரின் அனுபவம் இல்லாதவர்கள். 15 - 20 வருடங்களாக அரச சட்டத்தரணிகளாக அரசின் நலன் கருதி கடமையாற்றி வந்தவர்கள் தம்மை அறியாமலே அரச சட்டத் தரணிகளாகவே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாகவோ உச்ச நீதிமன்ற நீதியரசர்களாகவோ வந்த பின்னரும் சிந்திக்கின்றார்கள், செயல்படுகின்றார்கள். ஓரிருவர் இதற்கு விதிவிலக்காகலாம்.
இதில் ஒரு முக்கிய விடயம் கவனத்திற்கு எடுக்க வேண்டும். குற்றவியல் தவிர்ந்த மக்களின் பிரச்சினைகள் பெரும்பாலும் அரசுடனேயோ, அரச அலுவலர்களுடனோ, அரச கோட்பாடுகளுடனோ தான் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அரசிற்கும் பொது மக்களுக்கும் இடையில் தர்க்கம், பிணக்கு, முரண்பாடுகள் ஏற்படும் போது நீதிபதிகள் கட்டாயமாக மக்கள் பக்கம் இருந்து சிந்தித்தால்த்தான் ஒரு முறையான, நீதியான, நியாயமான தீர்மானத்திற்கு வரலாம்.
அரசானது சகல அதிகாரங்களையும் ஆற்றல்களையும் கொண்ட ஒரு பாரிய நிறுவனம். பொதுமக்களுக்கு சட்டமொன்றே அனுசரணை வழங்குகின்றது. சட்டத்தின் அனுசரணை இல்லை என்றால் ஒரு பொது மகன் அரசின் அதிகாரத்தின் முன் சக்தியற்றவனாகவே இருப்பான். ஆகவே பலம் குறைந்த, சக்தி குறைந்த, அதிகாரமற்ற பொதுமகனுக்கு அனுசரணையாக இருந்தே நீதிபதிகள் அரசுடனான வழக்குகளை விசாரிக்க வேண்டும், விளங்க வேண்டும்.
நான் உச்ச நீதிமன்ற நீதியரசராக உயர்வு பெற்று வந்த புதிதில் இவ்வாறான சட்டத்துறைத் தலைமை அதிபதி திணைக்களத்தில் இருந்து நேரே மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு உயர்வு பெற்று வந்த இரு நீதியரசர்களுடன் மூன்று நீதியரசர்கள் குழாமாக செயற்பட்டேன். ஒரு வழக்கில் போலீசாரால் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்ட ஒருவர் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக வழக்குத் தொடுத்திருந்தார்.
நான் வழக்கை நன்றாகப் படித்துவிட்டதில் விண்ணப்பதாரரின் பக்கம் நியாயம் இருந்ததைக் கண்டேன். ஒரு சட்டத்தரணி ஆஜராகி போலிசாரின் அட்டூழியம் பற்றி விபரிக்கத் தொடங்கினார். எமது குழாமின் தலைமை நீதியரசர் குறுக்கிட்டு "பொலிசார் அடித்திருந்தால் உங்கள் கட்சிக்காரர் ஏதோ பிழை செய்திருந்தார் என்று அர்த்தம். என்ன பிழை செய்தார் அவர்?" என்று அதட்டலாகக் கேட்டார். கனி~;ட சட்டத்தரணி தடுமாறினார். உடனே அவர் "பார்த்தீர்களா? உங்கள் கட்சிக்காரர் செய்த பிழையைச் சொல்ல நீங்கள் தயங்குகின்றீர்கள். நீங்களே தவறு செய்துவிட்டு இங்கு வராதீர்கள்! நாங்கள் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றோம்". என்றார். உடனே நான் "இல்லை. இந்த வழக்கை நான் படித்து வந்துள்ளேன். போலிசாருக்கு அறிவித்தல் உடனே அனுப்ப வேண்டும்" என்றேன்.
உடனே சிரேஸ்டரான அவர் என்னை வேறொரு கிரகத்தில் இருந்து வந்தவர் போலப் பாரத்து விட்டு மூன்றாவது நீதியரசரைப் பார்த்தார். அவரும் அதே திணைக்களத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். உடனே எங்கள் குழாமின் தலைமை நீதியரசர் "நாங்கள் பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த வழக்கை நிராகரிக்கின்றோம்" என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. முதல் அனுபவம். உடனே நான் "அறிவித்தல் அனுப்ப வேண்டும் என்று நான் கூறுவதையும் உங்கள் கட்டளையில் உள் நுழையுங்கள்" என்றேன். "தேவையில்லை" என்றார் அவர். "இல்லை தேவை!
ஏனென்றால் யார் பெரும்பான்மையர் யார் சிறுபான்மையர் என்று கூறப்படவில்லை. உங்கள் தீர்மானத்திற்கு நான் ஒத்துடையவர் அல்ல" என்றேன். கோபத்துடன் நான் கூறியதைத் தன் தீர்மானத்தில் பின்வருமாறு உள்ளடக்கினார் - "நீதியரசர் விக்னேஸ்வரன் இதற்கு எதிர்" என்று.
இங்கு போலீசார் செய்பவை சரியென்ற அரசு சார்பான அந்த நீதியரசர்களின் மனோநிலையையே சுட்டிக்காட்ட வருகின்றேன்.
தற்போதைய பிரதம நீதியரசர் நளின் பெரேரா அவர்கள் விரைவில் ஓய்வு பெற்றுச் செல்ல உள்ளார் எனி வருபவர் அநேகமாக அரச சார்புப் பின்ணனியைக் கொண்டவராகவே இருப்பார். அரச சட்டத்தரணிகள் அரசிற்காக சேவை செய்யும் போது அரசு சார்பான பாராளுமன்ற அங்கத்தவர்கள், பிரதம மந்திரி, ஜனாதிபதி போன்றவர்களின் கருத்துக்கு அமையவே சேவையாற்றுகின்றார்கள்.
பெரும்பான்மை இனத்தவரைக் கொண்ட அரசாங்க அங்கத்தவர்களின், போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். "எமது படையினர் தப்பேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்" என்று ஜனாதிபதியே கூறியுள்ளார். அதன் அர்த்தம் என்ன? "எமது படையினர்" என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உள்ளார்கள். விசாரணைகள் ஏதும் செய்தறியாமலே அவர்கள் தப்பெதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்குக் காரணம், அவர்கள் "எமது படையினர்" என்பதால் தப்பேதும் செய்திருக்க மாட்டார்கள் என்பதே. இது தான் ஜனாதிபதியின் வாதம்.
எமது படையினர் இவ்வாறான மனோ நிலை கொண்ட அரசாங்கத்தினர் இருக்கும் போது அவ்வாறான அரசாங்கத்தினரைத் தமது தொழில் காலத்தில் காப்பாற்றி வந்த நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமோ வேறேதேனும் சிறப்பு நீதிமன்றங்களோ நீதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கலாமா?
அண்மைய காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்று வரும் போது நீதி நியாயத்திற்குப் பயந்து தீர்ப்புத் தருபவர்கள், இன ரீதியான விடயங்கள் எழும் போது நீதியை நிலை நாட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில காலத்திற்கு முன்னர் மூன்று சிங்கள சட்டத்தரணிகள் நூலொன்றில் இனத் துவேசம் எந்த அளவுக்கு நீதித்துறையில் நர்த்தனம் ஆடுகின்றது என்பது பற்றிக் கூறியிருந்தார்கள்.
ஒரே மாதிரியான நிகழ்வுகளில் சிங்கள மக்களுக்கு ஒரு தீர்மானம் தமிழ் மக்களுக்கு வேறொரு தீர்மானம் கொடுத்திருந்ததைச் சுட்டிக்காட்டி இருந்தார்கள். ஆகவே சிங்கள அரசியல்வாதிகளிடையே ஜனநாயகம் பற்றிய பிணக்கு, அரசியல் யாப்பு பற்றிய பிணக்கு எழும்போது நீதியுடன் நடந்து கொள்ளும் நீதியரசர்கள் அல்லது நீதிபதிகள் இனரீதியான அல்லது தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் எழும் போது அல்லது "எமது படையினர்" பற்றி எழும் போது நீதியை நிலைநாட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அவர்களின் பின்னணி அதற்கு இடங்கொடுக்காது. ஆகவே யுத்த குற்றங்கள் சம்பந்தமாக நியாயத்தை எதிர்பார்த்தால் வெளிநாட்டு சட்டத்துறை அல்லது நீதித்துறை உள்நுழைவுகள் அவசியம் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment