"கடைசியாக முன்னெடுக்கப்பட்ட சமரச முயற்சியையும் மைத்திரி நிராகரித்தார்"




இலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது 'பேஸ்புக்' பக்கத்தில் இது குறித்து மனோ கணேசன், விளக்கமான பதிவொன்றினை இன்று சனிக்கிழமை பதிவிட்டுள்ளார்.
பிரதமர் பதிவியிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், சில முயற்சிகள் நேற்றும் (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டன.
பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவாகுவதை, தன்னால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மைத்திரி அடம்பிடித்தார். அவரின் அந்த பிடிவாதம், ஜனநாயக விரோதமானது என்றாலும், ஜனாதிபதி பதவியில் மைத்திரியே இருப்பதால், அவரை ஏதாவது ஒரு வகையில் அனுசரிக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது.
எனவே, "நாடாளுமன்றத்தில் 14ஆம் தேதி, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி , வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால், புதிய பிரதமராக யாரை பதவியில் நியமிக்கலாம் என்பது தொடர்பில் உரையாடுவோம்" என்று, நேற்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதியிடம் சொல்லப்பட்டது. அதன் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடனும் இதுபற்றி பேசப்பட்டது. அவர்களும் பேசுவதற்கு இணங்கினர்.
அவசியமானால் நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒருவரை பிரதமராக நியமிப்பது குறித்து ஆலோசிப்பதற்கும், ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் இணங்கினர்.
இந்த விவகாரங்கள் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளுடன்தான் மைத்திரி பேசியுள்ளார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேசவில்லை. ஆகவே, "எங்களிடமும் பேசினால், சிக்கலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஆராயலாம்" என, ஐக்கிய தேசியக் கட்சியின் மேற்படி முக்கியஸ்தர்கள் கூறினார்கள்
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக, நேற்றிரவு ஜனதிபதி மைத்திரியின் சகோதரர், ஐக்கிய தேசிய முன்னணி முக்கியஸ்தர்கள் இருவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சு நடந்து கொண்டிருந்த போதே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரி கையொப்பமிட்டார் என்று, மனோ கணேசனின் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.