சட்ட வைத்திய அதிகாரியை நியமிக்க கோரிக்கை




( அப்துல்சலாம் யாசீம்) 

சட்ட வைத்திய  நிபுணர் நியமனத்தை அவசரமாக மேற்கொள்ளுமாறு 
 கிண்ணியா சூரா சபை கோரிக்கை! 
   
  திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த விசேட சட்ட வைத்திய நிபுணர் வெளிநாட்டு பயிற்சிக்கு சென்று இருக்கும் நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் இல்லாத நிலையில் பிரேதங்கள் அதி தூர பிரதேசங்களுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இதனால் பொது மக்கள் பலத்த சிரமத்தை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 திருகோணமலை மாவட்டத்தில்  பல வைத்தியசாலைகளில் இருந்தும்  11  பிரதேச செயலாளர்  பிரிவுகளிலும்  இடம்பெற்று வருகின்ற  அசம்பாவித சம்பவங்களை  பரிசோதனை செய்வதற்காக  சட்ட வைத்திய நிபுணர் இல்லாமையினால் பொலிஸாரும்  பொதுமக்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரியவருகின்றது .

குறிப்பாக சந்தேகத்திற்கிடமான கொலை  பாலியல் துஷ்பிரயோகம்  மற்றும்  மகப்பேற்று மரணம்  போன்ற  விசாரணைகளை  முன்னெடுப்பதற்காகவும்  பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் மிக முக்கியமாக சட்ட வைத்திய நிபுணர் தேவைப்படுகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் முதல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சட்ட வைத்திய நிபுணர் வெளிநாடு சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் அதனால்  திருகோணமலையில் இடம்பெறுகின்ற சந்தேகத்திற்கிடமான மரணங்கள் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பல ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு பொலநறுவை மற்றும் வவுனியா போன்ற வைத்தியசாலைகளுக்கு சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கை பெறுவதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய்களை செலவிட்டு பிரேதங்களை கொண்டு செல்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இதற்கான வாகன ஏற்பாடு ,பொலிஸாரை கொண்டு செல்லுதல் உட்பட பல்வேறு செயற்பாடுகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே செய்ய வேண்டியுள்ளது. 

எனவே மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு மிக அவசரமாக விசேட சட்ட வைத்திய   நிபுணர் ஒருவரை நியமித்து தருமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும், மத்திய சுகாதார அமைச்சு இடமும் கிண்ணியா சூரா சபை கோரிக்கை வைத்துள்ளது.