நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு




இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"19வது திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் இப்போது நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். உடனடியாக யாரும் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காகவே வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்."
இதனால் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்படுகிறது எனவும் நான் மட்டுமல்ல இன்னும் பல சட்டத்தரணிகளும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை மறுநாள் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தை நாடுவேன் என சுமந்திரன் தெரவித்தார்.