மட்டக்களப்பு மாவட்டத்தில்,வெள்ளத்தினால் 249 குடும்பங்கள் பாதிப்பு




சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 179 குடும்பங்கள் 656 பேர் இடம்பெயர்ந்து 3 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

இதேவேளை கொழும்புக்கான புகையிரத சேவை மற்றும் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக இடர் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.சி முகமட் றியாஸ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை தொடக்கம் நேற்று (06) காலை 8.30 மணிவரை 124.3 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. 

அதேவேளை நேற்று காலையில் இருந்து மாலை வரை 60 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

திங்கட்கிழமை ஆரம்பித்து தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் வாகரை, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி ஆகிய 3 செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் பாதிக்கப்பட்ட 179 குடும்பங்கள் 656 பேர் இடம்பெயர்ந்து வாகரை வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள 3 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். பிரதேச செயலாளர் ஊடாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

இதேவேளை வெள்ளத்தினால் மட்டக்களப்பு புனானை புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத தண்டவாளம் சேதமடைந்துள்ளதையடுத்து புகையிரத போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பாதிப்படைந்த தண்டவாளத்தை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 

கிரான் பிரதேசத்தில் கிரான் பிரதேசத்தில் உள்ளக சகல போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகம் மற்றும் பிரம்படித் தீவுக்க செல்லகின்ற பாதையும் துண்டக்கப்பட்டுள்ளதுடன் அந்த பிரதேசத்தில் மக்களை மீட்க மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

உன்னிச்சையில் 6 அங்குல உயரத்திற்கு 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் ரூபம் குளத்தில் இருந்து 4 அடி உயரத்துக்கு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது இருந்தபோதும் எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லை. 

ஆனால் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி இடம்பெறுமானால் மாவட்டத்திலே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றதுடன் சகல பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களும் முன் ஆயத்தமாக இருக்கின்றதுடன் தொண்டர் அமைப்புக்களும் முடக்கி விடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

(அம்பாறை நிருபர் சரவணன்)