#MeToo விவகாரம் - இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் பேச்சு




தமிழ் திரைப்பட இயக்குநரான பாரதிராஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டு வடக்கு மாகாணத்திற்கும் வருகை தந்திருந்தார். அப்போது கிளிநொச்சி மாவட்டத்திற்குச் சென்ற பாரதிராஜா கிளிநொச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
அந்நிகழ்வில் வீரத் தமிழன், வீரத் தமிழச்சிகள் எல்லாம் வாழ்ந்த இந்த மண் அதுவும் கிளிநொச்சி என்றால் பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி என்றும் பல்வேறு உணர்ச்சிக் கருத்துக்களையும் தன்னுடைய உரையின்போது தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் வருகை தந்த பாரதிராஜா நேற்று (திங்கள்கிழமை) மாலை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் கலந்து கொண்டார். அப்போது ஈழத்திலுள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்து விடலாமென ஈழத் தமிழர்களை புகழ்ந்து பாராட்டி உணர்ச்சி கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார்.
மேலும், திரைப்படத் துறை தொடர்பிலும் அத்துறையின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தெரிவித்திருந்தார். அதிலும் ஈழ சினிமாவை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? எனக் கேட்கப்பட்டபோது ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடும் வல்லமை கொண்டவர்கள் எனவும் பதிலளித்தார்.
"ஈழத்தில் உள்ள தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் ஒரே உணர்வை, ஒரே திறமைகளை, ஒரே கலைப்படைப்பை கொண்டவர்கள். இருவர்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லை. ஆனால் தென்னிந்திய சினிமா கண்ட வளர்ச்சியினை ஈழத்து சினிமா காணவில்லை. இதற்கு ஈழத்தில் இருந்த பிரச்சனைகளே காரணமாகும். அந்த பிரச்சனைகளால் ஈழத்திற்கு வளங்கள் கிடைக்கவில்லை. இதனாலேயே போதிய வளர்ச்சியினை ஈழத்து சினிமா எட்டவில்லை. உலகெங்கும் வியாபித்துள்ள ஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
#MeeToo விவகாரம் - இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகும் பாரதிராஜாவின் பேச்சுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் ஒரு இயக்குனராக நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களுடைய படங்களில் பெண்களை நடிக்க வைப்பதுடன் பெண்களுடன் இணைந்து நீங்களும் படங்களில் நடித்துள்ளீர்கள். அவ்வாறிருக்கும் போது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். அதிலும் #MeeToo என்ற முறைமையில் தற்போது சினிமாத்துறையிலுள்ள பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்களை நீங்கள் ஒரு இயக்குநராக எவ்வாறு பார்க்கின்றீர்கள் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது ஆவேசமடைந்த பாரதிராஜா அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருக்கின்றார். அவருடைய இந்தச் செயற்பாடு சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கின்றது.
மேற்படி கேள்வியைக் கேட்ட போது முதலில் மன்னிக்க வேண்டுமென்று பாரதிராஜா கூறினார். தொடர்ந்து என் சினிமா தொழில் தொடர்பாக எதனைக் கேட்டாலும் நான் பதில் சொல்வேன். ஆகவே MeeToo என்ற பிரச்சனையை எவ்வாறு பார்க்கின்றீர்கள் எனக் கேட்ட போது, #MeeToo என்றால் என்னவென்று சொல்லு என கடும் தொனியில் கேட்டார்.
#MeeToo என்றால் என்ன. அதில் என்ன பிரச்சனை? என மீண்டும் அவர் கடும் தொனியில் கேட்ட போது, சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை #MeeToo என்ற தலைப்பில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆகவே அதனைத் தான் கேட்கின்றோம் என ஊடகவியிலாளர் தெரிவித்த போது அதனை நீ பார்த்தியா? நீ பார்த்தியா? என மீண்டும் மீண்டும் கடும் தொனியில் கேட்டார்.
இல்லை தானே, அவ்வாறு கேள்விப்பட்டுருக்கிறியா நீ? அவ்வாறு கேள்விப்படுதற்கெல்லாம் நான் இங்க பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நான் பார்த்தேன். இதுதான் ஆதாரம் என்று நீ சொன்னால் அதற்கு நான் பதிலளிப்பேன் என்றார் பாரதிராஜா.
ஆகவே இனி வேறு எந்தக் கேள்வியும் கேட்கத் தேவையில்லை என்று தெரிவித்து அந்தச் சந்திப்பின் இடையிலையே எழுந்து சென்றார்.
குறிப்பாக பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டிருக்கின்ற போது அவை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு நீ பார்த்தியா?, கேள்விப்பட்டிருக்கிறியா நீ? கேள்விப்பட்டதற்கெல்லாம் பதில் வழங்க முடியாது என்று கடும் தொனியில் ஊடகவியலாளர்களை எச்சரித்து அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட பாரதிராஜாவின் செயல் தற்போது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது.