#MeToo பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண் பத்திரிகையாளர்களின் குரல்கள்




"எனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு எந்தவித தயக்கமும் இல்லை. இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை. எனவே வெட்கமும், குற்றவுணர்ச்சியும் எனக்கு தேவையில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.... எனவே, உண்மையில் வெட்கக்கேடான செயலை செய்தவர்களை சமூகத்தின் முன் நிறுத்துவதற்காக, என் மீது அவர்கள் தொடுத்த, தொடுக்க நினைத்த தாக்குதலை வெளிப்படையாக பேசுவேன்."
இப்படிச் சொல்வது, அனு புயான். தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் சம்வங்களை சமூக வலைதளங்களில் எழுதிய சில பெண்களில் ஒருவர் 'தி வொயர்' செய்தி வலைதளத்தின் நிருபர் அனு புயான்.
பாலியல் ரீதியாக சீண்டுதல், துன்புறுத்தல் என்பதை இப்படி எளிமையாக கூறலாம். "ஒருவர் மறுக்கும்போதும் அவரை தொடுவது, தொட முயற்சிப்பது, உடலுறவு வைத்துக் கொள்ளச் சொல்வது, பாலியல் உணர்வை தூண்டும் வகையில் கொச்சையாக பேசுவது, ஆபாசப் படங்களை காட்டுவது அல்லது அதுபோல் நடந்துக் கொள்ள முயற்சிப்பது, அனுமதியில்லாமல் பாலியல் தொடர்பு கொள்வது" என்று சொல்லலாம்.
பாலியல் துன்புறுத்தல் இந்தியாவில் எவ்வளவு சாதாரணமான விஷயமாகிவிட்டது? எத்தனை பெண்கள் தனிப்பட்ட முறையிலும், பணியிடங்களிலும் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள்? அதில் எவ்வளவு பேர் வேறு வழியில்லாமல் மெளனமாக இருக்கிறார்கள்? என்பது சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை #MeToo என்ற ஹேஷ்டேக் மூலமாக டிவிட்டரில் வெளிவந்தன.
நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர் நானா படேக்கரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகும், நகைச்சுவை கலைஞர் உத்சவ் சக்ரவர்த்தி மீது பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அடுக்கியப் பிறகு, பிரபலங்கள் உட்பட பல பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும் சமூக ஊடகங்களில் வலுவடைந்தன.
பல காலமாக பேசத் தயங்கி, மனதிற்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருந்த பல பெண்களின் உணர்வுகளை தூண்டி, அவர்களையும் சமூக ஊடகங்களில் பதிவிட வைக்கும் உணர்ச்சித் தூண்டுதலாகவும் இது அமைந்தது.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண் பத்திரிகையாளர்களின் குரல்கள் #MeTooபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
பத்திரிகை உலகத்திலிருந்து குரல்கள்
இந்த குரல்களில் பெரும்பாலானவை பத்திரிகை உலகத்திலிருந்து வந்தன. பல பெண்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆண்களின் பெயரை வெளியிட்டனர், சிலர் பெயர் குறிப்பிட்டாமல் பதிவிட்டனர்.
சில சம்பவங்கள் பணியிடத்தில், பெண்களின் ஒப்புதல் இன்றி வலுக்கட்டாயமாக செய்யப்பட்டது தொடர்பாகவும், பல பதிவுகள் பாலியல் ரீதியாக உறவு கொள்ளலாமா என்ற கோரிக்கைகள் மற்றும் ஆபாசப்படங்களை காண்பித்தது தொடர்பாகவும் இருந்தன.
அவை, கோபத்தையும், ஒரு விதமான எரிச்சலையும், சொல்ல முடியாத வருத்தத்தையும் பிரதிபலித்தன.
'பிஸினஸ் ஸ்டேண்ட்டர்ட்' பத்திரிகையின் மயங்க் ஜெயின் என்ற பத்திரிகையாளரின் பெயரை அனு தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். பாலியல் உறவுக்கு மயங்க் தனக்கு அழைப்பு விடுத்ததற்கு காரணம், அவரது மனதில் தான் ஒரு 'வெப்ஸைட் பெண்' என்ற நினைப்பு இருந்ததுதான் என்கிறார் அனு. தன்னை ஒரு விபச்சாரியாகவே மயங்க் நினைத்ததையே, அவரின் இந்த கோரிக்கையும், எண்ணமும் வெளிப்படுத்தியதாக அனு சீற்றத்தை வெளிப்படுத்தினார்.
அனுவின் பதிவுக்கு பிறகு, 'பெமெனிசம் இன் இண்டியா' என்ற வலைதளத்தை நடத்தி வரும் ஜப்லீன் பஸ்ரிசா என்ற பெண், இதுபோன்ற போக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்வதாகவும் அது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண் பத்திரிகையாளர்களின் குரல்கள் #MeTooபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையின் கருத்தை அறிந்துக் கொள்ள பிபிசி அவர்களை தொடர்பு கொண்டபோது, 'இந்த குற்றச்சாட்டுகள் பற்றி பதிலளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்போது, அது பற்றி சொல்கிறோம்' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.
அலுவலகத்தில் துன்புறுத்தல்
இந்த பிரச்சனை தொடர்பாக ஜப்லீன் பஸ்ரிசாவிடம் பிபிசி பேசியது. பொதுவெளியில் பேசத் தயங்கும் இந்த விஷயத்தை பற்றி பேசத்துணியும் பெண்களுக்கு ஆதரவாக நிற்பது அவசியம் என்று நினைத்தேன் என அவர் தெரிவித்தார்.
"இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதே இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் கருத்தாக இருந்தது. அதையே நான் வெளிப்படுத்தினேன். ஆனால் இதுபற்றி எல்லோரும் பேச ஆரம்பித்தபோது, பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிந்துக் கொண்டேன். #MeToo இந்த கனமான மெளனத்தை உடைத்து பேச்சுப் பொருளாக்குவதற்காக உருவாக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில், ஒரு வருடத்திற்கு முன்பு #MeToo பிரசாரம் தொடங்கியது, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்க வேண்டிய பிரெட் கேவனோ, ஜெர்மனியின் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற பலர் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள்ன.
ஆனால், இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஓரிரு குரல்களே எழுந்தது. பொதுவாக இந்தியா இந்த விஷயத்தில் பெருமளவில் அசாதாரணமான மெளனம் காத்தது என்றே சொல்லாம். இந்த குற்றத்திற்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பிறகும் இதே நிலை நீடித்தது.
2012இல், டெல்லியில் பேருந்தில் பயணித்த ஜோதி சிங் என்ற மாணவி, கும்பலால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொதுவெளியில் பரவலாக பேசப்பட்டது. அது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி, பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க ஒரு முக்கிய காரணமானது.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண் பத்திரிகையாளர்களின் குரல்கள் #MeTooபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
அந்த சட்டத்தின்படி, பாலியல் துன்புறுத்தல் செய்யும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்துதல் தொடர்பாக 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 2013இல் அது சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், நிறுவனங்கள் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.
பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்கான ஒரு பெண்ணின் தலைமையில் குழு ஒன்றை நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்று இந்த சட்டம் அறிவுறுத்துகிறது. குழுவின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கவேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை தொடர்பாக பணியாற்றும் அரசு சாரா அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவரும் அந்தக் குழுவில் இடம்பெறவேண்டும்.
நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற பல குழுக்களில் தன்னார்வ அமைப்பின் சார்பில் உறுப்பினராக பணியாற்றும் பெண்கள் நல ஆர்வலர் லக்ஷ்மி மூர்த்தி இவ்வாறு கூறுகிறார்: "இந்த சட்டம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் வேலை செய்யும் இடத்தில், பணியில் இருந்துக் கொண்டே, தவறு செய்தவரை தண்டிக்க முடியும்."
அதாவது, சிறை மற்றும் காவல்துறை போன்ற கடுமையான நடைமுறைகளில் இருந்து விலகி, பணிச்சூழலையும், உண்மையான நிலையும் அறிந்தவர்களின் இடையே விவகாரம் அலசப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நியாயம் வழங்கும் ஒரு சுலபமான வழி இது.
'தண்டனை என்பதன் பழைய வரையறைகள் மாறுகின்றன'
ஆனால், நிறுவனத்தில் அமைக்கப்படும் விசாரணைக் குழுக்கள் எப்போதுமே பயனுள்ளதாக இருப்பதில்லை என்று கூறுகின்றனர் சமூக ஊடகங்களில் எழுதும் பத்திரிகையாளர்கள்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் கே.ஆர். ஸ்ரீனிவாசன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கொடுத்த சந்தியா மேனனுக்கு நியாயம் கிடைத்ததா? இதை விசாரித்த குழுவினர், இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தன்னை அறிவுறுத்தியதாகக் கூறுகிறார்.
சந்தியாவின் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதாக தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் குழுவின் நடத்தை பற்றிய பிபிசியின் கேள்விக்கு எந்த பதிலையும் அங்கிருந்து பெறமுடியவில்லை.
இதற்கிடையில், இந்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக பத்திரிகையாளர் கே.ஆர். ஸ்ரீனிவாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தியாவிடம் பிபிசி பேசியது. "நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், ஒருசில மாதங்களில் வேலையை விட்டுவிட்டேன், ஆனால் கடந்த ஆண்டுகளில், அந்த நபருக்கு எதிராக இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் பற்றி கேள்விப்பட்டேன், இப்போதுதான் வெளிப்படையாக அதைப் பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்."
"தண்டனையின் பழைய பொருள் தற்போது மாறிவிட்டது. பிற பெண்களுக்கு தைரியத்தை கொடுத்து, அவர்களும் ஊக்கத்துடன் பேசி இதுபோன்ற பிரச்சனைகளை வெளி கொண்டுவர வேண்டும் என்று தற்போது பெண்கள் விரும்புகிறார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை பற்றி பேச முன்வருவது ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றம்."
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண் பத்திரிகையாளர்களின் குரல்கள் #MeToo
ஜப்லினின் கருத்துப்படி, "இந்த குழுக்கள், புகார்களை விசாரித்து நியாயம் வழங்குவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. கடந்த சில சம்பவங்களில், நிறுவனங்கள் அந்த பெண்ணின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத அணுகுமுறையை கண்டிருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், தவறான நடத்தையைப் பற்றி சம்பந்தப்பட்ட நபருக்கு இப்படி எச்சரிக்கை விடுப்பது சிறந்த வழியாக இருக்கலாம்."
எத்தனை நிறுவனங்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்கும் இத்தகைய குழுக்களை உருவாக்கியுள்ளன என்பது தொடர்பான எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
குழுக்கள் அமைக்கப்படுவது தொடர்பான பல்வேறு கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விசாரணைக் குழு அமைப்பது நிறுவனத்தின் பொறுப்பு. அதன் உறுப்பினர்களையும் நிறுவனமே தேர்வு செய்கிறது. இது, பாலியல் துன்புறுத்தல் புகார் வழங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நிறுவனத்தில் பணிபுரிபவரின் மீதான புகாரை அதே நிறுவனத்தை சேர்ந்தவர் விசாரித்தால் அது சரியானதாக இருக்குமா? சம்பந்தப்பட்ட நபரின் மீதே புகார் வந்தால் என்ன நடக்கும்? விசாரணை அதிகாரி, புகாரளிப்பவரின் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்துக் கொள்ளவாரா? நிறுவனத்தின் உயரதிகாரிகளின் மீதான குற்றங்கள் விசாரிக்கப்படும்போது குழுவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? புகாரளிக்கும் பெண் மீதான அழுத்தங்கள் அதிகமாகாதா? என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.
சமூக ஊடகத்தில் தனிப்பட்ட அனுபவங்களை எழுதுவதால் என்ன நன்மை?
சந்தியா இதற்கு பதிலளிக்கிறார். "தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஆணின் மீதான பாலியல் புகார்களை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறுவனத்திற்கு தோன்றும். இது தனிப்பட்ட விவகாரம் அல்ல, நிறுவனத்தின் நற்பெயர் அடங்கியிருக்கிறது என்பதால் பெண்கள் மீதான அலட்சியப் போக்கு அகலும். பணிபுரியும் ஆண்கள் நல்ல நடத்தைகளை கொண்டிருக்க வேண்டும் என்பதை நிறுவனம் புரிந்து கொள்ளும்" என்று சொல்கிறார் சந்தியா.
தன்யா ராஜேந்திரன்படத்தின் காப்புரிமைFACEBOOK
Image captionதன்யா ராஜேந்திரன்
'தி நியூஸ் மினிட்' வலைத்தளத்தின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரனுடன் பிபிசி செய்தியாளர் பேசியபோது, அவர் சில கருத்துக்களை தெரிவித்தார். "கடந்த ஆண்டுகளாக பெண் பத்திரிகையாளர்கள் தங்களிடையே பரஸ்பரம் இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தாலும், தற்போது தான் சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பேசத் தொடங்கியிருக்கின்றனர். இருந்தாலும்கூட இன்னும் பலர் இதுபற்றி பொதுவெளியில் பேசும் அளவுக்கு தைரியம் இல்லாமல் இருக்கின்றனர்" என்று தன்யா ராஜேந்திரன் தெரிவித்தார்.
"இப்போது இதுபற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருப்பதால், தனிமனித நடத்தைகள் பற்றி நிறுவனங்கள் கவனம் செலுத்தும். தவறாக இருந்தால் அதை சரி செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். இது ஒரு ஆரம்பம்தான். பெண்களுக்கான சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான முதல் படி இது" என்று சொல்கிறார் தன்யா ராஜேந்திரன்.