புல்லுமலை தொழிற்சாலைமுற்றாகக் கைவிடப்பட்டது




பேரின்பராஜா சபேஷ், ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணிகளை, முற்றாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
“தொழிற்சாலை அமைக்கப்படுவதை, குறித்த பிரதேச மக்கள் எதிர்த்தனர்.
அ​தேபோன்று, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொழிற்சாலை அமைப்பதில்லை என எமது நிறுவனம் தீர்மானித்துள்ளது” என, அந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முஹம்மட் அப்துல் ஜெஷீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, செங்கலடி, செல்லம் பிறிமியர் அரங்கில், ​​நேற்று (22) இடம்பெற்ற, முக்கிய கூட்டத்துக்குப் பின்னர் நடத்திய, ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்​கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ரொமன்சியா லங்கா நிறுவனத்தின் உரிமையாளரான முஹம்மட் மும்தாஜ் மௌலவியின் சகோதரரும் நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முஹம்மட் அப்துல் ஜெஷீம், முஹம்மட் அமீர், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேசத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “குறித்த தொழிற்சாலையுடன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளருக்கோ அல்லது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கோ எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. இந்தத் தொழிற்சாலையை அரசியல் மயப்படுத்த வேண்டாம். ஆனால், தொழிற்சாலையை வைத்து, சிலர் அரசியல் செய்கிறனர்” என்றார்.
“தமிழர்களும் முஸ்லிம்களும் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்தத் தொழிற்சாலையை வைத்து இனங்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் வ​கையில், அரசியல் கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த தமிழ் உணர்வாளர்கள், “குறித்த தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறுத்திக் கொள்கிறோம் என வெறுமனே கூறிக்கொள்ளாமல், எதிர்காலத்தில் எந்தவிதமான சட்ட விவாதங்களுக்கும் செல்லமாட்டோமென, நிறுவனத்தின் உரிமையாளர் கடிதம் எழுதி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.