பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமெரிக்க நீதிபதி பிரெட் கேவனோவுக்கு முக்கிய செனட் உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் அவரின் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளியன்று குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் சூசன் கோலின்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ மன்சிலின் நீதிபதி கேவனோவுக்கு தங்களது ஆதரவை அளித்தனர்.
நீதிபதியின் பதவி உறுதியானால், அமெரிக்காவின் உயரிய நீதிமன்றம் பழமைவாத கொள்கைக்கு ஆதரவான நிலைக்கு திரும்பும்.
உச்சநீதிமன்றத்தில் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் கேவனோவ் சேருவாரா என்பதை உறுதி செய்யும் வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெற உள்ளது.
கருக்கலைப்பு மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு ஆகியவை குறித்து அந்த அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.
பிரெட் கேவனோவ், அமெரிக்க அதிபர் டிரம்பால் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டவர்.
சனிக்கிழமை நடைபெறும் வாக்கெடுப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவனோவ் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் அவரின் பதவிக்காலம் வாழ்நாள் வரை நீடிக்கலாம்.
வெள்ளியன்று நடைபெற்ற வாக்கெடுப்பு கேவனோவை உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்வதற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
கேவனோவின் நியமனத்திற்கு ஆதரவாக வாக்களித்த செனெட் குறித்து பெருமை படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கேவனோவின் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர், அதில் குறிப்பாக பேராசிரியர் கிறிஸ்டின் ப்லேசி ஃபோர்டும் ஒருவர்.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் பேராசிரியர் ஃபோர்ட் தானும் கேவனோவும் பதின்ம வயதில் இருந்தபோது 1982ஆம் ஆண்டு கேவனோவ் தன்மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்.
ஆனால், இந்த கூற்றை கேவனோவ் மறுத்துள்ளார். தான் அச்சமயத்தில் ஞாபக சக்தி மங்கும் அளவிற்கு குடித்திருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார் கேவனோவ்.
கேவனோவுக்கு ஆதரவாக வாக்களித்த செனட் உறுப்பினர் கோலின்ஸ், "பேராசிரியர் ஃபோர்டின் குற்றசாட்டுகள் உண்மையாக இருக்கலாம். ஆனால் அது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.
கோலின்ஸுக்கு கருத்துக்கு முன்னாள் அதிபர் எச்.டப்ள்யு. புஷ் மற்றும் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் சாரா சாண்டர்ஸ் ஆதரவளித்துள்ளனர்.
இதுகுறித்த எஃப்பிஐ விசாரணைக்கு அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் குடியரசுக் கட்சியினர் எஃப்பிஐ-ஆல் சமர்பிக்கப்பட்ட புதிய அறிக்கை தங்களால் பரிந்துரை செய்யப்பட்டவர் குற்றம் அற்றவர் என்பதை நிரூபித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த விசாரணை அறிக்கை நிறைவு பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
கேவனோவ் மீது குற்றம் சுமத்தியுள்ள பெண்களின் வழக்கறிஞர்கள், எஃப்பிஐயிடம் தங்கள் தரப்பில் சாட்சியளிக்க கொடுப்பட்ட நபர்களை எஃப்பிஐ தொடர்பு கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment