உலகின் மிக நீளமான கடல் பாலம்.




ஹாங்காங்- ஜுஹாய் மாகாணத்தை இணைக்கும் வகையில் கடலுக்கு மேலே 55 கி.மீ. தூரத்துக்கு உலகின் மிக நீளமான பாலத்தை சீனா அமைத்துள்ளது.. #china 

சீனாவின் நிலப்பகுதியையும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள மக்காவ் மற்றும் சுயாட்சி பிரதேசமான ஹாங்காங் உள்ளிட்ட தீவுப் பகுதிகளை இணைக்கும் விதத்தில், இந்த பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடல் பாலம் 55 கிமீ தூரத்திற்கு கடலில் அமைந்துள்ளது. ரூ.1.40 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்த கடல் பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் வசிக்கும் 6.8 கோடி மக்கள் இந்த பாலத்தால் நன்மை பெறுவர். 

ஹாங்காங், மக்காவ் தவிர்த்து 11 நகரங்களை சேர்ந்த மக்களுக்கு இந்த கடல் பாலம் எளிதான போக்குவரத்து தொடர்பை வழங்கும். கடந்த 2009ம் ஆண்டு இந்த பாலம் கட்டும் பணிகள் துவங்கின. கடந்த 9 ஆண்டுகளாக நடந்த கட்டுமானப் பணிகள் சில வருடங்கள் தாமதத்திற்கு பின் முடிவடைந்து இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலத்தில் பேருந்துகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களில் செல்ல விரும்புவோர் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். 

சீனாவின் முக்கிய நிலப்பகுதியில் அமைந்துள்ள ஸுஹாய் நகரிலிருந்து ஹாங்காங் நகருக்கு செல்வதற்கு ஏற்கனவே 4 மணிநேரம் பிடிக்கும். இந்த பாலத்தின் மூலமாக பயண நேரம் இப்போது வெறும் 30 நிமிடங்களாக குறைந்துள்ளது. Most Read: மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர் சீனாவின் கிரேட்டர் வளைகுடா பிராந்திய வளர்ச்சிக்கான முக்கிய திட்டமாக சீனா கூறினாலும், தென் சீன கடல்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் உத்தியாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்த பாலம் 30 கிமீ தூரத்திற்கு கடலில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், 6.7 கிமீ தூரத்திற்கு கடலுக்கு அடியில் 44.5 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை துவங்கம் இடங்களில் செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப் பாதைக்கு அமைந்துள்ள கடல் பகுதிக்கு மேலாக கப்பல்கள் தங்கு தடை இல்லாமல் பயணிக்க முடியும். இந்த பாலத்தின் மீதமுள்ள 22.9 கிமீ தூரம் கடலுக்கு மேலே உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள பாலமம் நிலப்பகுதி மற்றும் ஆற்றுக்கு குறுக்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 30 கிமீ தூரம் மட்டுமே கடல் பகுதியில் அமைந்துள்ளது 

குறிப்பிடத்தக்கது. ஈபிள் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புக்கு இணையான தரம் கொண்ட 4 லட்சம் டன் உயர் வகை ஸ்டீல் இந்த பால கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த அளவில் 60 ஈஃபிள் கோபுரங்களை அமைக்க முடியுமாம். 

இந்த பகுதியில் மணிக்கு 360 கிமீ வேகத்தில் புயல் அடித்தாலும், ரிக்டர் அளவுகோலில் 8 என்ற அளவில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்த பாலத்தை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த பாலத்தில் நாள் ஒன்றுக்கு 9,200 வாகனங்கள் பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலங்கள் மற்றும் சாலை திட்டங்கள் மூலமாக இந்த பாலத்தில் வாகனப் போக்குவரத்து குறையும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த கடல் பாலத்தை 'மரண பாலம்' என்று அழைக்கின்றனர். அதாவது, கட்டுமானப் பணியின்போது இந்த பகுதியில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இந்த பாலத்தை சீனா ஆர்வத்துடன் கட்டி திறந்துள்ள நிலையில், ஹாங்காங் மக்களுக்கு இந்த கடல் பாலத்தை விரும்பவில்லை. தங்களது மீது சீனாவின் பிடி இறுகுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுடன், சீனர்கள் அதிக அளவில் ஹாங்காங் வந்து தங்களது வேலைவாய்ப்புகள் மற்றும் வளத்தை அபகரித்துவிட வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சுகின்றனர். மறுபுறத்தில் இந்த ராட்சத கடல்பாலத்தால் இந்த பகுதியில் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 


பாலம் கட்டுமானத்திற்கு முன் இந்த பகுதியில் 148 வெள்ளை டால்பின்கள் இருந்ததாகவும், தற்போது 47 என்ற எண்ணிக்கையில் குறைந்துவிட்டதுடன், பாலம் அமைந்துள்ள கடல் பகுதியில் ஒன்று கூட தென்படவில்லை என்பதுடன், அதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பாலத்தை வைத்து ஹாங்காங் நகரை தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்காகவே இவ்வளவு பெரிய முதலீட்டை செய்துள்ளாதாகவும், வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.