தோட்ட பகுதி வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்படும்




(க.கிஷாந்தன்)
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி ஊடாக புதிய உலகை உருவாக்க நாட்டில் இன ஐக்கியத்தை மேம்படுத்த அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை இணைத்து பயணிக்கவுள்ளோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகள் (13.10.2018) அன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இதுவரை காலமும் மலையக அரசியல் பிரதிநிதிகள் முன்னெடுக்காத அபிவிருத்தி பணிகளை துரித கதியாக அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்து வருகின்றார். இன்று 157 புதிய வீடுகளை அமைப்பதற்கு 1500 இலட்சமும், உட்கட்டமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு 170 இலட்சமும் செலவு செய்து இந்த அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்.
2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்து பெற்றுக் கொண்ட அமைச்சர் திகாம்பரம் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி உரிமையுடன் தனி வீட்டில் வாழும் உரிமையையும் இன்றைய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக் கொடுத்து பெருந்தோட்ட மக்களை அபிவிருத்தி அடைய செய்துள்ளார்.
கடந்த காலங்களில் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு 7 பேர்ச் காணியை வழங்க வேண்டும் என நானும் கூட அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்தேன். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இன்றைய அரசாங்கத்திடம் அமைச்சர் திகாமடபரம் முன்வைத்த அமைச்சரவை பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 7 பேர்ச் நிலமும பெறப்பட்டதுடன், அதில் தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து இம் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இது அரசியல் இலாபம் கருதி செய்யப்படும் ஒரு தேவைப்பாடு அல்ல. மாறாக அமைச்சர் திகாம்பரத்தின் சமூகம் சார்ந்த மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க செய்யும் அபிவிருத்தி திட்டமாகும்.
அது மட்டுமல்லாது இன்று லயன் குடியிருப்புகளில் வாழும் 1,72700 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைத்து கொடுப்பதில் ஒரு இணக்காக கொண்டு செயல்படும் அமைச்சர் திகாம்பரத்திற்கு நாமும் உறுதுணையாக இருப்போம்.
தோட்ட பாதைகள், மலசலமூட வசதிகள், சுகாதார சேவை பாடுகள், கல்வி உயர்வு என பல்வேறு தேவைபாடுகளை பூர்த்தி செய்வதற்கும், அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சு பெரும் நிதிகளை ஒதுக்கி வருகின்றது.
எதிர்காலத்தில் மலையக வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் வகையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் செயல்பாடுகள் அமையும் என்பதில் ஐயம் இல்லை.
இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகளுக்கு அப்பால் கிடைக்கப்பெற்றிருக்கும் 10,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தில் கூட 1134 வீடுகள் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது. எனது தேர்தல் பிரதேசத்திற்கும் இந்திய வீடுகள் அமைப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இதுவரை தோட்டப்பகுதிகளில் பல வீடுகளை அமைக்கும் இந்த அமைச்சு சுகாதார மத்திய நிலையங்கள், மைதானங்கள் போன்றவற்றையும் 50ற்கும் மேற்பட்ட குடிநீர் வசதி திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
சுகாதார அமைச்சர் என்ற வகையில் தோட்ட பகுதிகளில் இருக்கும வைத்தியசாலைகளை அரசமயமாக்கி எதிர்வரும் காலத்தில் இம் மக்களும் தேசிய ரீதியில் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.