உலகின் முதல்தர இங்கிலாந்து அணியை, முகங்குப்புற வீழ்த்திய இலங்கை




இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. 

இங்கிலாந்து அணியில் தலைவர் மோர்கனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். அந்த அணியில் சகோதரர்களாக சாம் குர்ரன், டாம் குர்ரன் இடம் பிடித்தனர். சர்வதேச போட்டி ஒன்றில் இங்கிலாந்து சகோதரர்கள் இணைந்து ஆடுவது 1999-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். 

இதில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங்களை குவித்தது. 

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். முதல் 4 வீரர்களான டிக்வெல்லா (95 ஓட்டங்கள் ), சதீர (54 ஓட்டங்கள்), தலைவர் சந்திமால் (80 ஓட்டங்கள்), குசல் மென்டிஸ் (56 ஓட்டங்கள்) என அனைவரும் அரைசதம் விளாசினர். இலங்கை அணியில் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் ஒரே இன்னிங்சில் அரைசதம் காண்பது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வாகும். 

தொடர்ந்து விளையதடிய இங்கிலாந்து அணி முதல் 10 பந்துகளில் ஜாசன் ரோய் (4 ஓட்டங்கள்), அலெக்ஸ் ஹாலெஸ் (0), தலைவர் பட்லர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்தது. இந்த வீழ்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணியால் நிமிரவே முடியவில்லை. 

பென் ஸ்டோக்ஸ் (67 ஓட்டங்கள்), மொயீன் அலி (37 ஓட்டங்கள்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. அந்த அணி 26.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதையடுத்து ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஒரு நாள் போட்டி வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமானதாக இருந்தது. 

இலங்கை தரப்பில் அகிலா தனஞ்ஜய 4 விக்கெட்டுகளும், துஷ்மந்த சமவீரா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.