#கிண்ணியா: டெங்கு பரவும் அபாயம்




( அப்துல்சலாம் யாசீம்)

கிண்ணியா மீன் சந்தைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் பிளாஸ்டிக் போத்தல்கள், டின்மீன் சுண்டுகள்  தேங்கிக் கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

 மழைநீர் தேங்கி நிற்கின்ற வேளையில் அப்பொருட்கள் வெளியேற்றப்படாமல் நீர் உள்ளே புகுந்து காணப்படுவதாகவும் அதனால்  டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபையில் கடமையாற்றி வரும் பொது சுகாதார பரிசோதகர்கள் டெங்கு பரவும் விதத்திலான பொருட்கள் இருப்பதாக அறிந்திருந்தும் கண்மூடித்தனமாக செயற்படுவதாகவும் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே கிண்ணியாவில் டெங்கு நோயினால் கடந்த வருடம் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் டெங்கு வருவதற்கு முன்னரே சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

கிண்ணியா பிரதான வீதி, கிண்ணியா பொது நூலகம், கிண்ணியா மீன் சந்தை போன்ற பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில்  டின்மீன் சுண்டுகளும்  குரும்பை மட்டைகளும் அதிக அளவில் காணப்படுவதாகவும் அதற்குள்ளே நீர் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

டெங்கு நோய் பரவுவதற்கு முன்னரே  பொது சுகாதார பரிசோதகர்கள் கவனமெடுத்து அப்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்