இந்தோனீசிய விமானம் கடலில்




ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட இந்தோனீசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்தது என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 188 பேர் இருந்துள்ளனர்.
( 178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள்).
ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்தது.
இது பாங்கா பெலீடூங் தீவின் முக்கிய நகரம்.
விபத்துக்குள்ளான விமானத்தை விமானி கேப்டன் பவ்யே சுனேஜா, துணை விமானி ஹார்வினோ ஆகியோர் இயக்கினர். விமானி பவ்யே இந்தியர் என்று கூறப்படுகிறது.
இழுவைப் படகு ஒன்று விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதைப் பார்த்ததாக இந்தோனீசிய துறைமுக அதிகாரி சுயாதி என்பவர் கூறியதாக இந்தோனீசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.
அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 6.20க்கு (கிரீன்விச் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 23.30) இந்த புறப்பட்ட இந்த விமானம் 'போயிங் 737 மேக்ஸ் 8' வகையைச் சேர்ந்தது. இந்த மாடல் விமானங்கள் 2016-ம் ஆண்டு முதல்தான் பயன்பாட்டில் உள்ளன.
பதற்றமடைந்த பயணிகளின் உறவினர்கள்.படத்தின் காப்புரிமைREUTERS
Image captionவிபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளின் உறவினர்கள சோகத்தில்.
விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் யூசூஃப் லத்தீஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என 'லயன் ஏர்' விமான நிறுவன அதிகாரி ஒருவர் முன்னர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நிறுவனம் இந்தோனீசியாவை மையமாக வைத்து செயல்படும், குறைந்த கட்டண விமான நிறுவனம் ஆகும்.
எல்லா தகவல்களையும் திரட்டிவருவதாகவும், தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எட்வார்ட் சிரய்ட் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
இந்தோனீசியா ஆசியக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவுக்கூட்டம். ஏராளமான சிறு தீவுகள் நிரம்பிய இந்த நாட்டின் உள்நாட்டுப் போக்குவரத்து பெரிதும் விமானங்களையே நம்பியுள்ளது.
கடலில் படர்ந்துள்ள எபடத்தின் காப்புரிமைSUTOPO PURWO NUGROHO
தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப், "முப்பது முதல் நாற்பது மீட்டர் ஆழ நீரில் இந்த விமானம் பாய்ந்துள்ளது" என்கிறார்.
பயணிகள் பொருட்கள் என நம்பப்படும் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என மீட்புப் பணியாளர் ஒருவர் ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார்.
அறிமுகப்படுத்தியதில் இருந்தே சிக்கல்
'போயிங் 737 மேக்ஸ் 8' வகை விமானத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே சிக்கல்கள் இருந்து இருந்து வருவதாக விமானத்துறை வல்லுநர் ஜெர்ரி சோஜட்மேன் பிபிசியிடம் தெரிவித்தார். குறிப்பாக சமநிலையில் பறப்பதில் பிரச்சினை இருந்ததாக அவர் கூறுகிறார்.
2013ம் ஆண்டு கடலில் விழுந்த லயன் ஏர் விமானம்.படத்தின் காப்புரிமைAFP
Image caption2013ம் ஆண்டு பாலி தீவு அருகே கடலில் விழுந்த லயன் ஏர் விமானம்.
2013ம் ஆண்டு பாலி தீவு அருகே லயன் ஏர் விமானம் ஒன்று கடலில் விழுந்தது. ஆனால், அதில் இருந்த பயணிகள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். லயன் ஏர் விமான நிறுவனம் இந்தோனீசியாவில் இருந்து செயல்படும் நிறுவனம்.
(அடுத்தடுத்து வரும் தகவல்கள் சேர்க்கப்பட்டு இந்த செய்தி தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்த செய்தியின் இணைப்புக்கு மீண்டும் வாருங்கள். அல்லது ரெஃப்ரெஷ் செய்யுங்கள்.)