சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கீதா கோபிநாத்தை அதன் தலைமை பொருளாதார நிபுணராக பணியமர்த்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் இப்பதவியை ஏற்கவுள்ள முதல் பெண்மணி இவர்தான்.
இந்தியரான கீதா கோபிநாத் செலாவணி மதிப்பு குறித்த பணிகளில் திறம்பட இயங்கியதாக அறியப்படுபவர்.
இப்பதவியில் தற்போது இயங்கிவரும் மௌரிஸ் அப்ஸ்ட்ஃபெல்ட் கடந்த ஜூலை மாதத்தில் இவ்வருட இறுதியில் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக இப்பதவிக்கு கீதா கோபிநாத் வரவுள்ளார்.
''கீதா இவ்வுலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அட்டகாசமான கல்வியறிவும் அறிவார்ந்த தலைமை பண்பும் கொண்டவர் மேலும் பெரிய அளவில் சர்வதேச அனுபவமும் கொண்டவர்'' என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்ட்டின் லகார்டே தெரிவித்துள்ளார்.
ஐ எம் எஃப்பில் இப்பொறுப்புக்கு வந்திருக்கும் இரண்டாவது இந்தியரானார் கீதா. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பில் இருந்த ரகுராம்ராஜன் ஏற்கனவே ஐ எம் எஃப்பில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றியிருக்கிறார்.
யார் இந்த கீதா கோபிநாத்?
46 வயதாகும் கீதா கோபிநாத் மைசூரைச் சேர்ந்தவர். கோபிநாத் விஜயலக்ஷ்மி தம்பதியினருக்கு டிசம்பர் 8-ம் தேதி பிறந்தார். அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த கீதா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு வாஷிங்டன் பல்கலைகழகத்தில் இன்னொரு முதுகலை படிப்பை முடித்தபிறகு 2001-ல் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் ஆய்வுப்படிப்பை முடித்தார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2001-ல் உதவி பேராசிரியராக பணியாற்றியபிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். கேரளா அரசு கடந்த வருடம் இவரை மாநில பொருளாதார ஆலோசகராக நியமித்தது.
அமெரிக்க பொருளியல் பகுப்பாய்வு இதழ் மற்றும் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தில் சர்வதேச நிதி மற்றும் பெரு நிதி திட்டம் போன்றவற்றில் இணை ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். தற்போதைய சர்வதேச பொருளியல் கையேட்டின் இணை ஆசிரியரும் இவரே.
செலாவாணி மதிப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் சர்வதேச நிதி நெருக்கடி, நிதியியல் கொள்கை, கடன், வளர்ந்து வரும் சந்தை நெருக்கடிகள் உள்ளிட்டவை தொடர்பாக நாற்பது சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Post a Comment
Post a Comment