ராஜபக்‌ஷவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை




இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பு விஜயராமவில் உள்ள மகிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது மகிந்த ராஜபக்‌ஷ, இரா.சம்பந்தன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.
என்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து இன்று கூடி ஆராயவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிடவிரும்பாத உறுப்பனர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நெருக்கடியை ஆழமாக ஆராய்ந்து, நிதானமான ஒரு முடிவை எடுக்கும் என அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.