(க.கிஷாந்தன்)
தாழிறங்கியிருந்த அட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதி முழுமையாக 15.10.2018 அன்று முற்பகல் 11.30 மணியளவில் காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்துள்ளது. பிரதேச மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், உயிராபத்துகள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களை அடுத்து வீதி 14.10.2018 அன்றைய தினத்தை விடவும் 15.10.2018 அன்று பாரியளவில் தாழிறங்கியிருந்தது.
இதனால் அட்டன் – பொகவந்தலாவை நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் 14.10.2018 அன்றைய தினம் பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்து இந்த வீதி இவ்வாறு முழுமையாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நான்கு வீடுகளும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் சரிந்து வீழ்ந்துள்ளது. நிவ்வெளிகம பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பை அடுத்து, இந்த வீதியை அண்மித்துள்ள மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.
அட்டன் – பொகவந்தலாவை நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள மாற்று வீதியை தொடர்ந்தும் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, அட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணிப்போர் காசல்ரீ, நோட்டன் ஊடாக மவுஸ்ஸாக்கலை சந்தியை அடைந்து அங்கிருந்து அட்டனை நோக்கி பயணிக்க முடியும் எனவும்இ பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி பயணிக்கும் சாரதிகள் பொகவந்தலாவை - டின்சின் சந்தி ஊடாக டிக்கோயா நகரை சென்று அங்கிருந்து அட்டன் நகரை நோக்கி செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment