கவிஞர் வாலியின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
`சோழநாடு சொல்லுடைத்து' என மெய்ப்பித்திருப்போரின் பெயர்ப் பட்டியல் மிகவும் நீளம். அதில், தனியிடத்தைப் பெற்று காலத்தால் அழியாத புகழினை எய்தியவர், திருச்சி திருப்பராய்த்துறை ரங்கராஜன். சுருக்கமாக, கவிஞர் வாலி. ஓவியர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாசிரியர், திரைக்கதையாசிரியர், நடிகர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பன்முகத்தோடு இருந்து மறைந்தவர்.
கொஞ்சித் தாலாட்டும் இசையில் `நிலவும் தாரையும் நீயம்மா’ எனத் திரைப்படத்தில் முதல்முதலாகப் பாட்டு வரி எழுதினார். `அல்லி வருகிறாள்... அல்லி வருகிறாள்... அழகி அவள் பேரழகி’ என்று `காவியத்தலைவன்' படத்துக்கு எழுதிய கடைசிப் பாடல் வரை ஒவ்வொரு படத்தின் டைட்டில்களிலும் இடம்பெறும் `வாலி’ பெயரில் வாலியின் உழைப்பும், அவரது வளர்ச்சியின் வரலாறும் தெரியும். வாலியின் விரல்பட்டுப் பிறக்கும் பாட்டு வரிகளெல்லாம் அவரைப் பார்த்து, `உனக்காகப் பிறந்தேனே எனதழகா’ எனப் பாடிக்கொண்டே தவழ்ந்திருக்கும்போல! அவரது எழுத்தும் பேச்சும் சிந்தனையும் அவ்வளவு இளமையாய் அழகுற நனைந்து கிடக்கும். சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசின் விருதினை ஐந்து முறை வென்றவர். அறுபதுகளின், அதற்குப் பிந்தைய சில பத்தாண்டு காலத்தவர்களின் `அந்த நாள் ஞாபகம்’ நட்பின் நினைவுகளைத் தூண்டித் துளைத்துக் கிடந்தது. அந்தப் பாடல் காட்சிகளில், சிவாஜி ஹாக்கி ஸ்டிக்கைச் சுழற்றியாடுவதைப் போல, பாட்டு வரிகளைத் தூக்கிச் சுழற்றியாடியிருப்பார், வாலி.
வாலி வார்த்தைகளை வீச, எம்.ஜி.ஆர்., சாட்டையை வீசிய பாடல், `நான் ஆணையிட்டால்!’ இந்தப் பாடலை ஒன்றரை கோடித் தொண்டர்கள் கொண்ட அதிமுகவும் மற்றும் அதன் கிளைகளும் தங்களுடைய உதிரத்து உதிரங்களின் உற்சாகத் துள்ளலுக்காக இன்றும் தெருவெங்கும் ஒலிக்க விடுகின்றன. `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார், ஒரு மானமில்லை. அதில் ஈரமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார்’ தினசரி செய்தித்தாள்கள் ஒப்பிக்கும் வரிகளாக இவை நிகழ்காலத்துக்கும் நிலைத்துவிட்டன. வரலாற்றையும், தன் பார்வையில் எதிர்காலத்தையும் வார்த்தைகளின் வழியே சொன்னவர், வாலி. இவைபோல இன்னும் இன்னும் எத்தனையோ! ஏறக்குறைய 15,000 திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார்.
கறுப்பு வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், மல்டி கலர், டிஜிட்டல், 3டி (கோச்சடையான்) என்று இதுவரையிலுமான தமிழ்த் திரைப்பட வரலாற்றின் பரிணாமங்கள் அனைத்தினுள்ளும் தன்னை முழுதாய் நிரப்பி, அரை நூற்றாண்டுக்காலத் தமிழ் சினிமா கலைஞர்களுடன் பணியாற்றிய பெருமையைப் பெற்றவர். மேடையில், தனது கவிதைகளின் வார்த்தை விளையாட்டுகளினாலும், அதை ரசித்துச் சொல்லி கவிபாடும் விதத்தினாலும், எல்லா வயதினரையும் அரங்கினுள் கட்டிப்போட்டவர். `தாத்தா கொடுத்தார், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ... பேரன் கொடுத்தார், ஒரு ரூபாய்க்கு ஒரு ஹலோ’ என அரங்கிலிருந்த கலைஞர் உள்ளிட்ட அனைவரையும் வயது மறந்துச் சிரிக்க வைத்தவர், இந்த வாலிப விகடகவி.
இருபது புத்தகங்கள் எழுதியுள்ள வாலி, நல்ல ஓவியரும்கூட! `கலியுகக் கண்ணன்', `காரோட்டிக் கண்ணன்', `ஒரு செடியின் இரு மலர்கள்', `சிட்டுக்குருவி' உள்ளிட்ட 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதினார். `வடை மாலை’ படத்தில் மாருதிராவோடு இணைந்து இயக்குநராய்ப் பணியாற்றினார். எம்.எஸ்.விஸ்வநாதன், நாகேஷ், கருணாநிதி உள்ளிட்டோருக்கு மிகவும் நெருக்கமான நண்பராய்த் திகழ்ந்தார். தன் வாழ்க்கைக்காகவும், வளர்ச்சிக்காகவும் உதவி செய்தவர்களை என்றைக்கும் மறக்காமல் நினைவு கூர்ந்தவர். எம்.எஸ்.வியுடனான நட்பு குறித்து மிக உருக்கமாக வாலி சொல்லும் வாசகம், `விஸ்வநாதனைப் பார்ப்பதற்கு முன்புவரை சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்தேன். விஸ்வநாதனைப் பார்த்த பின்னர் சாப்பிட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்’.
வாலியின் பிறப்பையும் இறப்பையும் அவரின் வார்த்தை விளையாட்டுத் தொனியிலேயே சொல்வதெனில், `த்ரீ ஒன்’னில் (1931-ம் வருடம்) பிறந்து, `ஒன் த்ரீ’யில் (2013-ம் வருடம்) மறைந்த இந்த வாலிபக் கவிஞன், என்றுமே `ஆயிரத்தில் ஒருவன்’. அவரது பாடல் வரியே அஞ்சலிச் சொற்களாய் அவரை அலங்கரிக்கும். கவிராஜன்களுக்கு எல்லாம் ராஜன் இந்த ரங்கராஜன்தான்.
Post a Comment
Post a Comment