பொலன்னறுவையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள்






பொலன்னறுவை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தொழில்நுட்ப தொல்பொருள் நிலைய நிர்மாணப் பணிகளை நேற்று (14) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.

150 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்படும் முழு அளவிலான தொழில்நுட்ப தொல்பொருள் நிலையம் இதுவாகும்.

வரலாற்று காலம் முதல் தற்காலம் வரையிலான பாரம்பரிய தொழில்நுட்ப முறைமைகள், மன்னர்கள் ஆட்சி காலத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த தொழில்நுட்ப தொல்பொருள் நிலையம் அமைந்துள்ளது. இது நவீன கேட்போர்கூடம் மற்றும் நவீன தொழில்நுட்ப கண்காட்சி கூடங்களையும் கொண்டுள்ளது.

எமது கடந்த கால பாரம்பரியங்கள் மற்றும் மரபுரிமைகள் பற்றி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கும் விளக்கங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த தொழில்நுட்ப நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

தொழில்நுட்ப கூடத்தின் பௌதீக நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், தொல்பொருட்களை காட்சிக்காக வைக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அனைத்து நிர்மாணப் பணிகளையும் துரித கதியில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதனை தொடர்ந்து அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறித்த அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

தேசிய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சனுஜா கஸ்தூரி ஆரச்சி, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிறி சிறிசேன, மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் தலைவர் டி.பி.ஏ. பியதிலக்க ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேநேரம் “எழுச்சிபெரும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுவரும் பொலன்னறுவை புதிய பஸ் தரிப்பிடத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்த ஜனாதிபதி, அனைத்து நிர்மாணப் பணிகளையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பொலன்னறுவை 28 ஆம் கட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப் பணிகளை பார்வையிடச் சென்றார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஜனாதிபதியின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி அவர்களுக்கு சீன அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற அன்பளிப்பாக தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதன் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

மகாவலி, சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள புவிச்சரிதவியல், சுரங்கப் பணியகத்தின் மன்னம்பிட்டிய தொழில்நுட்ப சேவைகள் நிறுவனத்தின் மணல் வழங்கும் முறைமையில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்ததை தொடர்ந்து அப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இதன் காரணமாக நிறுவனத்தின் ஊழியர்களும் மணல் ஏற்றும் டிப்பர் வண்டி உரிமையாளர்களும் மிகுந்த கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து மணல் ஏற்றும் டிப்பர் வண்டி உரிமையாளர்கள், ஜனாதிபதி பயணம் செய்த பாதையின் இருபுறத்திலும் ஒன்றுகூடி இருந்தனர்.

பொலன்னறுவையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றிய வேளையில் இவர்களை கண்ட ஜனாதிபதி, அவர்களிடம் சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)