ஏ.எச்.ஏ. ஹுஸைன், அப்துல்சலாம் யாசீம்
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களைப் பாதுகாக்க வேண்டுமாயின், ஒலுவில் துறைமுகம் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென, சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைஷல் காசீம் தெரிவித்தார்.
இதுவிடயமாக, பிரதியமைச்சர் (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஒலுவில் பகுதி மீனவர்களுக்கும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கும் கடலரிப்புப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதாயின், ஒலுவில் வர்த்தகத் துறைமுகத்தை உடன் மூடுவதே சிறந்தது.
“இந்தத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரிய கடலரிப்பு ஏற்படத் தொடங்கியது. துறைமுக நிர்மாணத்தின்போது கடலினுள் பாரிய கருங்கற்களால் தடை அமைக்கப்பட்டது. இத்தடை ஏற்படுத்தப்பட்ட நாள் முதல் கரைவலை மீன்பிடி கிட்டத்தட்ட இல்லாமலேயே போயுள்ளது” எனவும் சுட்டிக்காட்டினார்.
“இயற்கையாக இடம்பெற்று வந்த கரைநீரோட்டம் பாதிக்கப்பட்டதனால், கரையோரத்தின் சமநிலை பாதிக்கப்பட்டு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல்நீர் துறைமுக வாயிலை அடைப்பதுடன், துறைமுகத்தின் தென்பக்கம் மணலைக் கொண்டுவந்து சேர்க்கின்றது.
“இதனால், துறைமுகத்தின் வடக்குத் திசை பாரிய கடலரிப்புக்குள்ளாகியுள்ளதுடன், வெளிச்சவீடு, துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் போன்றவை பாதிக்கப்பட்டதனால், இவற்றைப் பாதுகாப்பதற்காக அதிகாரசபை கடலினுள் வடக்கு - தெற்காக அலைத்தடுப்பு வேலியொன்றையும் அமைத்தனர்.
“இந்த வேலி அமைக்கப்பட்டதன் பின் ஒலுவிலுக்கு வடக்குப் பக்கத்தில் உள்ள கரையோரப் பிரதேச கிராமங்கள் பாரிய கடலரிப்புப் பிரச்சினைக்குள்ளாகியதுடன், பாலமுனை கடற்கரை சுமார் ஒரு கிலோமீற்றர் வரை கடலுக்குள் சென்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment