(க.கிஷாந்தன்)
மலையகப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் புதிய கிராமங்களுக்கு மலையக முன்னோடிகளின் பெயர்களை வைத்து நாம் மலையகத்திற்காக உழைத்தவர்களையும் உழைப்பவர்களையும் கௌரவப்படுத்தி வருகிறோம். ஆனாலும் எதற்கெடுத்தாலும் தங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொண்டமான் என வால் வைத்துக்கொண்டு வரும் கூட்டம் அவர்களது குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் லஞ்சம் வாங்கி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் வாலை சுருட்டிக் கொண்டு பெயரை மறைத்துக்கொண்டுள்ளனர் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நுவரலியா கந்தப்பளை கோரட்லோஜ் தோட்டத்தில் அமையப்பெற்ற “பாக்கியம் புரம்”, போட்சூட் தோட்டத்தில் “மோத்தாபுரம்” ஆகிய தனிவீட்திடுத்திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ராஜாங்க கல்வி அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மாகாண சபை உறுப்பினர் ஆர்,ராஜாராம், சோ. ஶ்ரீதரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வி.புத்திரசிகாமணி பிரதேச உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் திகாம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மலையகத்தின் முன்னோடி அரசியல், கலை, இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரின் பெயரை புதிய கிராமங்களுக்கு சூட்டுவதன் ஊடாக நாம் மக்களிடம் உண்மையான வரலாற்றைக் கொண்டு செல்கிறோம். இன்று போட்சூட் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கிராமத்துக்கு முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஆர். மோத்தா அவர்களின் பெயரை சூட்டியுள்ளோம். அதேபோல கோட்லொஜ் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கிராமத்துக்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது தாயாரின் பெயரை சூட்டுவதற்கு பிரேரணை முன்வைத்த போது நான் அதனை மனப்பூர்வமாக அங்கீகரித்தேன். காரணம் அவரது தாயார் பிறந்த ஊர் இந்த ஊர் தவிரவும் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் கடந்த முப்பதாண்டு காலமாக அரசியலிலும் குறிப்பாக கல்வித்துறையில் பணியாற்றி கௌரவ கலாநிதி பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். இப்போது கூட அவரது பெயரில் அல்லாமல் அவரது தாயாரை கௌரவிப்பதற்காக இந்த கிராமம் “பாக்கியம்புரம்” என பெயர் இடப்படுகின்றது. இங்கு வந்தபோது தான் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜின் தாயார் பிறந்த ஊரும் இதுவே என்றும் அவரது தாயார் பெயரும் பாக்கியம் என்பதும் கூட தெரியவந்தது. கந்தப்பளை தோட்டத்தில் பணக்காரர்கள் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ராதா சொன்னார்.அதேபோல எங்கள் ஊரான மடகொம்பரை அரசியல்வாதிகள் நிறைந்த ஊராகும்.
நாளை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அரசியல்வாதிகள் தமது குடும்பத்தினரின் பெயர்களை சூட்டுவதாக பலர் விமர்சனம் முன்வைப்பார்கள். அவர்களுக்காக நான் முன்கூட்டியே ஒரு கருத்தினை சொல்லி வைக்கிறேன். நாங்கள் காரண காரியங்களுடன் பல ஆளுமைகளின் பெயர்களை சூட்டிவருகிறோம். அவ்வாறில்லாமல் ஒரு குடும்பத்தின் பெயரான தொண்டமான் என மலையகத்தில் மைதானம், பாலம், பள்ளிக்கூட கட்டடம் என எல்லாவற்றுக்கும் சூட்டி வருபவர்கள் தங்களது குடும்பத்தில் இருந்து இறக்குமதியாகும் அத்தனை பேருக்கும் அந்தப் பெயரை வால் போல ஒட்டவைத்து விடுவார்கள். ஆனால் இப்போது அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தலைவராக பதவி வகித்துக் கொண்டு லஞ்ச ம் வாங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போது கே. முத்துவிநாயகம் என்று மட்டுமே வெளியே சொல்லுகிறார்கள். அவரது மகன் பெயர் செந்தில் தொண்டமான் என்றால் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெயர் முத்து விநாயக தொண்டமான் என்றுதானே இருக்க வேண்டும். இது வரை அவர்கள் குடும்பத்தில் இருந்து வந்த அனைவர் பெயருக்கு பின்னாலும் தொண்டமான் என பெயர் போட்டு கொள்ளுவது “தில்” என கூறியவர்கள் செந்தில் தொண்டமான் தந்தைதான் முத்துவிநாயகத் தொண்டமான் என கூறுவதற்கு “தில்” இல்லாமல் போனது ஏன்.
அட்டனில் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரியை தொண்டமான் பவுண்டேசன் இடம் இருந்து நேரடியாக எனது அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி அளித்தபோது அதன் ஆரம்ப பெயரான பூல்பேங்க் பெயரை நாங்கள் பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இந்தியாவுக்கு சென்று அரசியல்வாதிகளிடம் முறையிட்டு அவர்களது குடும்ப பெயரை களங்கப்படுத்தியதாக பிரச்சாரம் செய்தார்கள். அப்படி அங்கலாய்த்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தற்போது தனது தந்தை முத்துவிநாயகம் தொண்டமான் செய்த காரியத்தையும் இந்தியாவில் போய் சொல்லவேண்டும் . இதையெல்லாம் கேள்விப்பட்டால் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆன்மா என்னவாகும். தான் வளர்த்துவிட்ட கட்சியும் அரசியலும் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை எண்ணி நெஞ்சு வெடித்திருப்பார்.தொண்டமான் பவுண்டேசன் ஊழல் தொடர்பாகவும் நாங்கள் இதனையே வலியுறுத்துகின்றோம்.
இந்தியாவுக்கு ஜல்லிக்கட்டுக்கு கால்நடைகளை விளையாட்டுக்கு அழைத்து செல்லும் அதே வீரத்தை இங்கே இலங்கை கால்நடைகளை வைத்து செய்துள்ள வீர விளையாட்டுகளையும் சொல்ல வேண்டும். பயிற்சி நிலைய பெயர்மாற்ற விவகாரத்தையும், தொணடமான்கள் ஜல்லிக்கட்டுக்கு போவதையும் பெரிது படுத்தி எழுதும் ஊடக நண்பர்கள் இத்தகைய செய் திகளையும் தயங்ககாமல் வெளியிட முன்வரவேண்டும். தொண்டமான் பவுண்டேசன் பணிப்பாளராக இருந்த லோகநாதன் கடந்த மாதம் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதும் இவ்வாறே மூடி மறைக்கப்பட்டது. உண்மைகளை வெளியே கொண்டுவர ஊடகங்கள் தயங்க கூடாது. எதிர்வரும் நாட்களில் இப்படி பல விடயங்கள் அம்பலத்துக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment