தாழிறங்கியது, வீதி




(க.கிஷாந்தன்)
அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஏற்பட்டிருந்த வெடிப்பு முற்றாக தாழிறங்கி நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் 6 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அட்டன் தொடக்கம் பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடையை நோக்கி செல்லும் இந்த பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இந்த நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு மேற்புறமாக உள்ள இந்த பிரதான வீதி சுமார் 12 அடி தாழிறங்கி வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
15.10.2018 அன்று அதிகாலையில் வெடிப்புற்றிருந்த இந்த பிரதான வீதி ஓரம் முற்றாக தாழிறங்கி, மேலும் அப்பகுதியில் நிலங்கள் தாழிறங்கி வருவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அட்டனிலிருந்து நோர்வூட் வழியாக பொகவந்தலாவ, பலாங்கொடை ஆகிய பகுதிகளுக்கும் நோர்வூட்டிலிருந்து மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்து தடையால் அசௌகரியங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், தொழிலுக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதோடு, பல மைல்களை கடந்து செல்லும் மாற்று வழிகளை பயன்படுத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இப்பகுதியில் மண் பரிசோதனை செய்வதற்கு அதிகாரிகள் விரைந்துள்ளதுடன், இப்பகுதி மண்சரிவுடன் தாழிறக்கம் கண்டு வருவதை உறுதியளித்துள்ளனர்.
எனவே இவ்வீதியினூடான போக்குவரத்தில் ஈடுப்படும் சாரதிகள் மற்றும் மக்கள் இப்பகுதிக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.