அம்பாறை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயிலை, கடந்த சில மாதங்களாக மூடியுள்ள மணலை அகற்றுமாறு கோரி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால், மீனவர்கள், இன்று (08) வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தத்தமது மீன்பிடிப் படகுகளையும் வீதியில் போட்டு, கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியை வழிமறித்து, காலை 7 மணிக்கு ஆரம்பித்த இப்போராட்டம், நண்பகல் 12 மணி வரை நீடித்தது.
இதனால், போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டதோடு, பயணிகள் பல அளெகரியங்களை எதிர்கொண்டனர். இதனையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கல்முனை கரையோர மாவட்ட மீன கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கம் , கல்முனை மாவட்ட கடற்றொழில் அமைப்பு என்பன இணைந்து மேற்கொண்ட இந்த வீதிமறியல் போராட்டத்தில், கடற்றொழிலுக்கும் செல்லாது மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரதான கடற்றொழில் இறங்குதுறையாக, ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் காணப்படுகின்றது. அத்துறைமுகத்தின் நுழைவாயில், கடந்த சில மாதங்களாக மண்ணால் மூடப்பட்டுக் காணப்படுவதால், மீனவ சமூகம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன், கடற்றொழில் நடவடிக்கைகளும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளனவென, அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். நஸீர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அதற்குத் தீர்வாக மணலை அகழ்வதற்குக் கப்பல், துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும், மணல் அகழ்வு இடம்பெறவில்லையென அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இதற்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் வரை, தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகளைச் செய்வதாகவும் இப்போராட்டத்தைக் கைவிடுமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
கலந்துரையாடலில் மாவட்ட மீன்பிடிப் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஒலுவில் துறைமுகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மணல் அகழ்வைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளுக்குத் தீர்வு காண்பதற்குமான கோரிக்கைகளை முன்வைத்து, துறைமுக நுழைவாயிலுக்கு முன்னால், பொதுமக்களால் கடந்த சனிக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் (08) தொடர்ந்தது.
Post a Comment
Post a Comment