( ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா நகர சபைக்குட்பட்ட மீன் சந்தையை நவீனமயப்படுத்த தருமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்
கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மீன் சந்தை கடந்த பல வருட காலமாக திருத்தப்படாமல் இருப்பதாகவும் இது குறித்து நகரசபைக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மீன் வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா மீன் வியாபாரிகள் நலன்புரிச் சங்கத்தினால் நகரசபைக்கு பல கடிதங்களும் பல கோரிக்கைகளும் வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒரு வருடத்திற்கு 56 இலட்சம் அறவிடப்பட்டு வருவதாகவும் மீன் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நகரத்தின் பிரதான வீதியில் காணப்படுகின்ற மிக முக்கியமான மீன் சந்தை இதுவாகும்.
எதுவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொட்டில்களில் இருப்பது போல எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்படுவதாகவும் இதனை நவீன மயப்படுத்தி தருமாறும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த சந்தையை நம்பி 20 மீன் வியாபாரிகள் தொழில் புரிந்து வருவதாகவும் பல தடவைகள் நகர சபையிடம் கோரிக்கை விடுத்தும் இந்த வருடம் மாத்திரம் நான்கு தூண்கள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டு உள்ளதாகவும் மீன் வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை மீன் எடுக்க வருபவர்கள் துர்நாற்றம் வீசுவதாக பேசும் அளவுக்கு இந்த மீன் சந்தை அசுத்தமாக காணப்படுவதாகவும் நாய் பூனை மற்றும் மாடுகள் இந்த மீன் சந்தைக்குள் பிரவேசித்து அசுத்த படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா மிக முக்கியமான பிரதேசமாகும். கிண்ணியாவில் மூன்று அரசியல்வாதிகள் இருந்தபோதிலும் கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேச சபைகள் இருந்தபோதிலும் பல அரசியல்வாதிகள் இந்த கிண்ணியா பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் மீனவர்களினதும், மீன் வியாபாரிகளினதும் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும் மீன் வியாபாரிகளின் பிரச்சினைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே கிண்ணியா நகர சபைக்குட்பட்ட மீன் சந்தையை உடனடியாக புனரமைத்து நவீன மயப்படுத்தி தருமாறு மீன்பிடி வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment
Post a Comment