மட்டக்களப்பு,வைத்தியசாலையை முற்றுகையிட்ட பயிற்சி தாதியர்கள்




மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியின் பயிற்சி தாதியர்கள், வைத்தியசாலையின் நிர்வாக கட்டிட தொகுதியை முற்றுகையிட்டு இன்று (18) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தாதிய போதனாசிரியர் ஒருவரின் செயற்பாட்டினை கண்டித்தும் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டத்தினை மாணவர்கள் மேற்கொண்டனர். 

தாதிய பயிற்சி கல்லூரியின் போதனாசிரியர் ஒருவர், மாணவர்கள் நவராத்திரி நிகழ்வினை நடாத்த முற்பட்டபோது அதற்கு எதிராக பேசியதுடன் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் மாணவர்களையும் போதனாசிரியர்களையும் அதன் அதிபரையும் மோசமான வார்த்தைகளினால் பேசுவதாகவும் மாணவர்களை கீழ்தரமான முறையில் நடாத்துவதாகவும் தாதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் கடந்த காலத்தில் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில் இன்று காலையும் 23 மாணவர்களை வலுக்கட்டாயமாக அறையொன்றில் குறித்த தாதிய போதனாசிரியர் பூட்டிவைத்திருந்ததாகவும் அவர்களை தாங்கள் மீட்டதாகவும் தாதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த போதனாசிரியர்கள் தமக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாகவும் தமக்கான கல்வி நடவடிக்கைகளை அவர் சரியான முறையில் செய்வதில்லை எனவும் தெரிவிக்கும் மாணவர்கள் குறித்த போதனாசிரியரை கல்லூரியில் இருந்து மாற்றம் செய்யும் வரையில் தாங்கள் இனி கல்லூரிக்கு செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்தனர். 

இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி கலாரஞ்சனி கணேஸ் தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றது. 

இதில் தாதிய பயிற்சி உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் இணைப்புச்செயலாளரும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினருமான ரொஸ்மன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் முரளி ஆகியோர் பங்குகொண்டனர். எனினும் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்தது. 

குறித்த போதனாசிரியருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கையெடுக்கப்படும் என அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும் போராட்டத்தினை கைவிடுமாறும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி கலாரஞ்சனி கணேஸ் தாதிய மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் குறித்த போதனாசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் வருகைதந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)