குறிஞ்சான் கேணி பாலத்தைப் புணரமைக்குக





( அப்துல்சலாம் யாசீம்) 

கிண்ணியா குறிஞ்சாக் கேணி பாலம் அமைப்பது தொடர்பாக நகரசபை உறுப்பினர் மஹ்தி  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம்  ஆண்டின் இறுதிப் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கிண்ணியாவின் அதிகமான பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப் பட்டிருந்தது. அது மாத்திரமன்றி கிண்ணியா கொட்டியாபுரக் குடாவில் முடிவடையும்  மகாவெளி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவும் கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகளும் திறக்கப் பட்டமையினாலுமே இந்த வெள்ள நிலமை ஏற்பட்டது. 

அக் காலத்தில் செய்கை பண்ணப் பட்ட கிண்ணியா விவசாயிகளின் அனைத்துப் பயிர்களும் வேளாண்மையும் சில கால்நடைகளும் முற்று முழுதாக அழிக்கப் பட்டன. 2014 ம் ஆண்டு ஏற்பட்ட அந்த வெள்ளம் கிண்ணியா வரலாற்றில் இது வரை கண்டிராத மறக்க முடியாத பாரிய வெள்ளமாகும். இதன் காரணமாக உடைந்து  சேதமாகிய பாலமே குறிஞ்சாக் கேணி பாலமாகும்.

 இப்பாலத்தில் தற்போதும் பாதுகாப்பற்ற முறையிலேயே போக்குவரத்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.  

 கிண்ணியா பிரதேசத்தில் சுமார் 82000 மக்கள் வாழுகின்ற அதே நேரம்  37000 வாக்காளர்களையும் கொண்ட ஒரு பெரும் பிரதேசமாகும்.

  கடந்த 2015 ஜனவரி 08 ந் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான   பிரச்சாரத்திற்காக   கிண்ணியாவுக்கு  வருகை தந்திருந்தீர்கள்.


அதேநேரம்  வெள்ளம் காரணமாக பயிர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் உடைந்து, வீடுகளுக்குள் வெள்ளம்  புகுந்ததன் காரணமாக  வீட்டை விட்டு வெளியேறி அகதிகளாகிய  வாழ்ந்த நேரமாக அமைந்திருந்தது. 

அவ்வாறு இருந்தும்  மைதானம் முழுக்க நிறைந்திருந்த   கிண்ணியா மக்களால் வழங்கப் பட்ட மாபெரும் வரவேற்பையும் ஆதரவையும்  ஜனாதிபதி அவர்களின் கண்கள் இன்னும் மறந்து  இருக்காது என நினைக்கின்றேன்.

 இப் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்திருந்த போது கிண்ணியா குறிஞ்சாக் கேணி பாலத்தை அமைப்பதில் இருந்தே எனது சேவையை ஆரம்பிப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தீர்கள்.

இவ்வாக்குறுதியினை நம்பி ஏற்றுக் கொண்ட இக் கிண்ணியா மக்கள் மனமுவந்து 92 வீதமான வாக்குகளை வழங்கி முழு இலங்கையையும் திரும்பிப் பார்க்க வைத்து சாதனையை படைத்திருந்தார்கள்.

 ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த இக் கிண்ணியா மக்களுக்கு குறிஞ்சாக் கேணி பாலத்தை அமைத்துக் கொடுக்காதது  மாபெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது 

ஆகவே  ஜனாதிபதி அவர்களின் வாக்குறுதி பொய்ப்பிக்குமா என்றும் இம்மக்கள் ஏமாற்றப் பட்டு விட்டார்களா  என்ற கேள்வியையும் இங்கு  ஏற்படுத்துகின்றது.

மீண்டும் ஜனாதிபதி அவர்களின் கவனத்தை இக் குறிஞ்சாக் கேணி பாலத்தின் பக்கம் திருப்புவதற்காக  மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் தான் தேவையோ என்ற கேள்வியையும் ஏற்படுத்துகின்றது.

எனவே  ஜனாதிபதி அவர்களே! கிண்ணியா மக்களின்மக்களின் நலன் கருதி கிண்ணியா குறிஞ்சான்கேணி பாலத்தை மிக விரைவில் நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது