“நான் பெருமைப்படும் கேரளாவில் தாக்கப்படுவேன் என நினைக்கவில்லை”




"கேரளாவில் பிறந்து வளர்ந்த எனக்கு, நான் பெருமைப்படும் ஊரில், இப்படி தாக்கப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்கிறார் சபரிமலை விவகாரத்தை செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் மினிட் செய்தியாளர் சரிதா பாலன்.
சபரிமலை நடை புதன்கிழமை திறக்கப்பட்டதில் இருந்து, பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தாக்குதல்கள் என பம்மை, நிலக்கல் பகுதிகள் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.
அங்கு செய்தி சேகரிக்க சென்ற சரிதா பாலன், பூஜா பிரசன்னா, சுஹாசினி ராஜ் ஆகிய பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்.
இதில் சரிதா பாலன் முதுகில் கடுமையாக உதைக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
அவரை பிபிசி தமிழ் செய்தியாளர் அபர்ணா ராமமூர்த்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, நடந்த சம்பவங்களை அவர் விரிவாக பகிர்ந்து கொண்டார்.
எதிர்ப்பு
சபரிமலை விவகாரம் தொடர்பாக நிலக்கலில் இருந்து செய்தி சேகரித்து கொண்டிருந்தேன். அங்கு நடைபெற்ற போராட்டத்தை எல்லாம் புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்துக் கொண்டிருந்தேன்.
கோப்புப்படம்படத்தின் காப்புரிமைARUN SANKAR / GETTY IMAGES
Image captionகோப்புப்படம்
நான் ஊடகத்துறையை சேர்ந்தவரா என்று சிலர் கேட்டதற்கு நான் என்றேன். என் ஊடக நண்பர்களும் அங்கிருந்தார்கள். எங்களை பார்த்து ஊடகத்தினர் இதையெல்லாம் எடுக்கக்கூடாது என்றும், திரும்பி செல்லவும் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டேன். அப்போது திடீரென ஒலிப்பெருக்கி மூலம் கர்ம சமிதி என்ற குழு அறிவிப்பு வெளியிட்டார்கள். நான் நிலக்கலில் இருந்து பம்மைக்கு செல்ல முடிவெடுத்தேன்.
அங்கிருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து பிடித்தேன். ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த பல பக்தர்களும் அதில் நிரம்பி இருந்தார்கள். நான் பேருந்தில் மறைந்தெல்லாம் அமரவில்லை. சாதாரணமாகதான் பயணித்தேன். நான் ஊடகத்தில் பணிபுரிவதாக அவர்களிடம் தெரிவித்தேன்.
சபரிமலை: தாக்கப்பட்ட பெண் செய்தியாளரின் நேரடி அனுபவங்கள்படத்தின் காப்புரிமைTWITTER
அவர்கள் என்னை மேடம் என்று அழைத்து நல்ல விதமாகவே நடத்தினார்கள். அந்த பேருந்தில் இருந்த பக்தர்களில் பல வயதான பெண்களும் இருந்தனர். அவர்கள் என்னை ஒரு பிரச்சனையாகக் கூட கருதவில்லை.
பக்தர்களா? போராட்டக்காரர்களா?
சிறிது நேரம் கழித்து அந்த போராட்டம் நடந்த இடத்துக்கு அருகே பேருந்து அடைந்தது. திடீரென ஒரு குழுவினர் பேருந்தை நிறுத்தினார்கள். பேருந்தில் பெண்கள் யாரேனும் ஒளிந்து இருக்கிறார்களா என்று தேடத் தொடங்கினர். நான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்ததை பார்த்து அங்கு கீழ் இருந்தவர்கள் என்னை இறங்க (அவர்கள் பயன்படுத்திய வார்த்தை 'இறங்குடி') சொன்னார்கள். நான் செய்தியாளர் என்று கூற வந்ததை அவர்கள் கேட்கக்கூட தயாராக இல்லை.
இத்தனைக்கும் நான் கோயிலுக்கு 25 கிலோ மீட்டருக்கு தூரத்தில் இருந்தேன். நான் செய்தியாளர் வேஷத்தில் கோயிலுக்கு செல்கிறேன் என்று நினைத்தார்கள். அவர்கள் பிரச்சனை செய்ததில் கூட்டம் கூடியது. நான் பேருந்தில் இருந்து இறங்கினேன். அந்தக் கூட்டத்தில் இருந்த என் நண்பர் ஒருவர், என்னை அவர்கள் தாக்காதவாறு பார்த்துக் கொண்டார். உடனே காவல்துறையும் அங்கு வந்தது.
கூட்டம் அதிகமான நிலையில், மிகக் குறைவிலான காவல்துறையினரே அங்கிருந்தனர். ஆனாலும், என்னை சுற்றி வளைத்த காவல்துறை, என்னை பாதுகாத்து கொண்டு சென்றனர். என்னுடன் இன்னொரு பெண் செய்தியாளரும் இருந்தார். இருவரையும் அவர்கள் வாகனத்திற்கு எங்களை கூட்டிச் சென்றனர்.
சபரிமலை: தாக்கப்பட்டஎப்படி? - விவரிக்கும் பெண் செய்தியாளர்படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES / GETTY IMAGES
அப்போது, எங்களை மோசமான வார்த்தைகள் பயன்படுத்தியும், எங்களை ஏதோ குற்றவாளிகள் போல புகைப்படம் காணொளிகள் எடுத்து சிரித்தனர். மேலும், என்னை நேரடியாக தாக்க முயற்சித்தனர். நாங்கள் எப்படியோ காவல்துறை வாகனத்திற்கு அருகில் சென்றுவிட்டோம்.
நான் ஜீப்பில் ஏறும்போது, என் முதுகுத் தண்டில் ஒருவர் எட்டி உதைத்தார். நான் ஜீப்பின் இருக்கையில் அமராமல் கீழே ஒளிந்து அமர்ந்தேன். எனக்கு மேல் இருக்கையில் உட்காரகூட பயமாக இருந்தது.
என்னை அடித்தது பக்தரா அல்லது போராட்டக்காரரா என்பது எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரி ஒரு செயலை செய்யும் ஒரு கும்பலை எப்படி பக்தர்கள் என்ற கூறுவது.
எட்டி உதைக்கப்பட்டேன்…
நான் பேருந்தில் இருந்தபோது, என்னுடன் இருந்தது பக்தர்கள். அவர்கள் என்னை தாக்கவில்லையே. நான் பேருந்தில் இருந்தபோது சற்று அச்சத்தில்தான் இருந்தேன். ஆனால், அவர்கள் என்னிடம் நன்றாக பேசினார்கள்.
சபரிமலைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
என் நண்பரோ அல்லது காவல்துறையினரோ உரிய நேரத்தில் வரவில்லை என்றால் நான் மிகக் கடுமையாக தாக்கப்பட்டிருப்பேன். பின்னர் நாங்கள் நில்லக்கல் காவல்நிலையத்திற்கு சென்றோம். நான் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வரவே அஞ்சினேன். யார் எங்கு நிற்கிறார்கள் என்று தெரியாது. அந்த இடம் காடு போல இருக்கும்.
தற்போது நான் திருவனந்தபுரத்திற்கு வந்துவிட்டேன். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் எனக்கு தசை பிடிப்பு இருப்பது தெரிய வந்தது. நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்திருக்கிறார்.
நான் செய்தியாளராக பல இடத்திற்கு சென்றுள்ளேன். அரசியல் பிரசாரம் நடந்த இடங்களில் இருந்து செய்தி சேகரித்திருக்கிறேன். இதுவே இப்படியான முதல் அனுபவம். எனினும், இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.
போராட்டம்தானே என்று நினைத்தேன். அவர்கள் யாரையும் தாக்க மாட்டார்கள் என்று எண்ணிணேன். ஆனால், இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதெல்லாம் ஒரு 5-10 நிமிடத்தில் நடந்து முடிந்தது.
இது எனக்குதான் நடந்ததா … நான் என்ன செய்ய வேண்டும்.. எவ்வாறு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றுகூட எனக்கு தோன்றவில்லை. தற்போது நான் சாதாரணமாக உள்ளேன்.
பிற செய்திகள்: