அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் புதன்கிழமை பகலில் கரையை கடந்த மைக்கேல் சூறாவளி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில ஆளுநரான ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.
''பலரின் வாழ்க்கையை இந்த சூறாவளி புரட்டிவிட்டது. எண்ணற்ற குடும்பங்கள் தங்களின் அனைத்து உடமைகளையும் இழந்துள்ளனர்'' என்று அவர் கூறியுள்ளார்.
மைக்கேல் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பால் பல வீடுகள் அவற்றின் அடித்தளத்தில் இருந்து பிய்த்து எறியப்பட்டுள்ளன; எண்ணற்ற மரங்கள் சாலையில் விழுந்துள்ளன. மேலும் வீதிகளில் மின்சார இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இரவு முழுவதும் 10க்கும் மேற்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க கடலோர காவல்படையினர் குறைந்தது 27 பேரை காப்பாற்றியுள்ளதாக ஆளுநர் ரிக் ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியான மைக்கேல் மேலும் நகர்ந்து அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு எவ்வளவு?
புளோரிடாவில் வசித்துவந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் முன்னதாக உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த எச்சரிக்கைகளை தாண்டியும் குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மைக்கேல் சூறாவளி பாதிப்பால் இதுவரை 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் நால்வர் புளோரிடாவிலும், ஜார்ஜியா மற்றும் வடக்கு கரோலினா மாகாணங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
புளோரிடா, அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் இந்த சூறாவளியால் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புளோரிடாவில் அரசு நிவாரண முகாம்களில் 6000க்கும் மேற்பட்டோர் தஞ்சம் கோரியுள்ளனர்.
அமெரிக்க பெருநிலப் பரப்பு கண்ட கடுமையான சூறாவளிகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது தற்போது அமெரிக்காவைத் தாக்கிய மைக்கேல் சூறாவளி.
மிஸிஸிப்பி மாகாணத்தில் 1969-ஆம் ஆண்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கேமில் சூறாவளி மற்றும் புளோரிடாவில் 1935-ஆம் ஆண்டில் கரையை கடந்த லேபர் டே சூறாவளி ஆகியவை அமெரிக்க பெருநிலப்பரப்பில் பாதிப்பை ஏற்படுத்திய சக்திவாய்ந்த சூறாவளிகளாக கருதப்படுகின்றன.
Post a Comment
Post a Comment