இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தில் புகுந்துகொண்டு சிங்கள மாணவர்கள் சிலர் இரண்டு வாரமாக செய்துவரும் போராட்டத்தை எதிர்த்து அங்கு ஓர் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என பெருந்தொகையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பகடி வதை எனப்படும், ரேக்கிங்கில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நான்கு சிங்கள மாணவர்களை மீண்டும் பல்கலைக் கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அதே துறையைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டு கடந்த இரண்டுவாரமாக போராட்டம் நடத்துகின்றனர். இவர்களைக் கண்டித்தே திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சில மணி நேரம் முற்றாக ஸ்தம்பித்தன. ஆர்ப்பாட்டத்தின் போது, பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் மூடப்பட்டதால், வாகனங்கள் உள்ளே நுழைய முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன.
பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்துள்ள மாணவர்கள், இரண்டு வாரமாக அங்கேயே தொடர்சியாகத் தங்கி வருகின்றனர்.
இந்த மாணவர்கள், வேறு எவரையும் நிர்வாகக் கட்டடத்தினுள் நுழை அனுமதிக்காமையினால், பல்கலைக்கழக நிர்வாக, நிதி நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளன.
இந்நிலையில், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தில் நுழைந்துள்ள மாணவர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று போலீஸ் நிலையத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தது.
இதனை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்துக்கு போலிஸார் கொண்டு சென்றதையடுத்து, நிர்வாகக் கட்டடத்தில் புகுந்துள்ள மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, கடந்த திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், நிர்வாகக் கட்டத்தில் புகுந்துள்ள மாணவர்கள் அங்கேயே தொடர்ந்தும் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நிர்வாகக் கட்டடத்தில் அம்மாணவர்கள் புகுந்துள்ளதை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்துள்ள மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மூத்த விரிவுரையாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் கூறுகையில் "நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர்கள் வெளியேறவில்லை. இதனையடுத்து, அந்த மாணவர்களைக் கைது செய்யுமாறு கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவும் நடைபெறவில்லை. போலீஸார் தமது கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும். நீதிமன்றம் பிறப்பித்த கட்டளையை, போலிஸார் உடனடியாக நிறைவேற்றியிருந்தால், இந்தப் பிரச்சினை இன்று வரை தொடர்ந்திருக்காது" என்றார்.
பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர் சங்கத் தலைவர் எம்.எம். நவ்பர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஊடகங்களிடம் பேசுகையில்; நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் போலீஸார் அக்கறை காட்டவில்லை என்றார். நிர்வாகக் கட்டடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு அரசு உதவித் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், ஊழியர் சம்பளத்தை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாகக் கட்டடத்தில் புகுந்தவர்கள் யார்? ஏன்?
பகடி வதையில் (ராகிங்) ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட தமது சகாக்களான, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 4 மாணவர்களை, மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தே, அத்துறை மாணவர்கள், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து மேற்படி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, இந்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று, நிர்வாகக் கட்டடத்தில் புகுந்துள்ள மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் எஸ்.எல். அப்துல் ஹலீமிடம் விசாரித்தபோது,
"தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், அவர்களின் வகுப்பைச் சேர்ந்த ஏனைய சிங்கள மாணவர்கள் மீது, பகடிவதை எனும் பெயரில் கடுமையான சித்திரவதைகளை உடல், உள ரீதியாக மேற்கொண்டார்கள். இதன் காரணமாக, சில மாணவர்கள் தமது கல்வியை நடுவில் விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் தம்மீது மேற்கொள்ளப்பட்ட பகடிவதை தொடர்பில் முறையீடு செய்தனர். இதனையடுத்து பகடிவதை மேற்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத் தடை விதித்தது. ஆயினும், மிக கொடூரமான முறையில் பகிடிவதை செய்த மாணவரொருவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தண்டனை வழங்கப்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் மேற்முறையீடு செய்தனர். எனவே, அந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, திரும்பவும் இவ்வாறான குற்றங்களைச் செய்யக் கூடாது என்கிற நிபந்தனையுடன், அவர்களின் வகுப்புத் தடையை நீக்கி பல்கலைக்கழக நிருவாகம், மீண்டும் வகுப்புக்களில் இணைத்துக் கொண்டது. ஆனால், பல்கலைக்கழத்திலிருந்து விலக்கப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்கவில்லை.
இந்த நிலையில், நிபந்தனையுடன் வகுப்புத் தடை நீக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பகடிவதையில் ஈடுபட்டார்கள். சக மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்களை மேற்கொண்டார்கள். எனவே, அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு மீளப்பெறப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், மேலும் மூன்று மாணவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டனர்.
அந்த வகையில், மொத்தமாக பகடிவதையில் ஈடுபட்ட 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மீண்டும் சேர்ந்துக் கொள்ளுமாறு கோரியே, தற்போது நிர்வாகக் கட்டடத்தை, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சில மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள்" என்றார் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் எஸ்.எல். அப்துல் ஹலீம்.
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, வகுப்புகள் நடைபெற்று வருகின்ற போதிலும், நிர்வாக நடவடிக்கைகள் முடங்கிய நிலையிலேயே உள்ளன.
Post a Comment
Post a Comment