அக்டோபர் முதல் தேதியன்று இரவு தூங்கச் சென்ற சரவணன் குடும்பத்தினர், அடுத்த நாள் காலையில் கண் விழிக்கவேயில்லை. காரணம்? ஏ.சி…
சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்த சரவணனின் வீட்டின் கதவு, விடிந்து வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் அண்டை வீட்டார் சந்தேகத்தின் பேரின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சரவணன், அவரது மனைவி, எட்டு வயது மகன் கார்த்திக் என மூவரின் சடலங்கள்தான் இருந்தன.
ஏ.சியில் இருந்து நச்சுவாயு கசிந்ததே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
இரவு உறங்க சென்றபோது, மின்சாரம் தடைபட்டதால், ஜெனரேட்டர் மூலம் குளிர்சாதனத்தை இயக்கிவிட்டு படுக்கைக்கு சென்றிருக்கின்றார் சரவணன். பிறகு மின்சாரம் வந்துவிட்டது, ஆனால் ஏ.சியில் இருந்து நச்சு வாயு கசிந்ததால் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே மூவரின் மரணமும் நிகழ்ந்துள்ளது.
இது மிகவும் வருத்தத்திற்குரிய, எதிர்பாராத சம்பவம் என்றாலும், ஏ.சியில் வாயு கசிந்ததால் ஏற்பட்ட முதல் சம்பவம் இது என்று கூறிவிடமுடியாது. கம்ப்ரஸர் வெடித்து மரணம் நிகழ்ந்ததையும், அலுவலகத்திலும், வீடுகளிலும் இருக்கும் அனைவருக்கும் ஒன்றுபோல ஒரே நேரத்தில் தலைவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவங்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
வெப்பத்தை தணித்து, தன்மையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தும் ஏ.சியே உயிரை எடுக்கும் இயந்திரமாக மாறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது, அதுவும் தற்போது ஏ.சி என்பது ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து மாறியிருக்கிறது.
அதோடு, வீடுகளில் இல்லாவிட்டாலும், வெளியிடங்களில், கடைகளில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் என மக்கள் அதிகமாக புழங்கும் பெரும்பாலான இடங்களில் ஏ.சியின் குளுமையை அனுபவிக்காதவர்களின் எண்ணிக்கை சொற்பம் என்ற அளவுக்கு சுருங்கிவிட்டது.
எனவே, ஏ.சியில் இருந்து நச்சு வாயு வெளியேறுவது ஏன், வாயு கசிவதை எப்படி தெரிந்துக் கொள்வது, அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்.
ஏ.சி உடல் நலத்திற்கு தீங்காவது எப்போது?
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Science and Environment Center (CSE)), திட்ட மேலாளர், அவிகல் சோம்வம்ஷியிடம், பிபிசி குழுவினர் இதுபற்றி பேசினார்கள்.
"நவீன ஏ.சி இயந்திரங்களில் முன்பு இருந்ததை விட இப்போது குறைவான நச்சு வாயுக்களே பயன்படுத்தப்படுகிறது. இவை R-290 ரக வாயு ஆகும், இது தவிர பல்வேறு விதமான வாயுக்களும் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு, குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள் பயன்படுத்தப்பட்டன. இது ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. 15 ஆண்டுகளில் இந்த வாயு உபயோகத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற நிலைப்பாடும் எடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ க்ளோரோ-ஃப்ளோரோ கார்பன் பின்னர் பயன்படுத்தப்பட்டது. இப்போது அதுவும் பயன்படுத்தப்படுவதில்லை" என்கிறார் அவிகல் சோம்வம்ஷி.
உங்கள் வீட்டில் உள்ள ஏ.சியில் என்ன வாயு இருக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? அதற்கான விடையையும் பகர்கிறார் சோம்வம்ஷி.
"தற்போது இந்தியாவில் ஏ.சியில் எரிவாயு ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் வாயுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், சில நிறுவனங்கள் தூய்மையான ஹைட்ரோகார்பனை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. தூய்மையான ஹைட்ரோகார்பன், பிற வாயுக்களைவிட சிறந்ததாக இருப்பதால், அதை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. இதைத் தவிர, இயற்கையான வாயுக்களையும் பயன்படுத்தலாம் என்பது தொடர்பான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்கிறார் அவர்.
டெல்லி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் கெளஷலிடம் இதுபற்றி பேசினோம். 'குளோரோ ஃப்ளோரோ நம் உடலில் நேரடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றபோதிலும், அவை கசிந்து இயற்கையாக இருக்கும் வாயுக்களோடு கலந்து தீங்கு விளைவிக்கும்' என்கிறார் கெளஷல்.
ஏ.சியில் இருந்து வெளியேறும் காற்று தலைவலியை ஏற்படுத்தலாம், ஆனால் மரணத்திற்கான காரணமாக மாறும் வாய்ப்புகள் குறைவே என்று CSE கூறுகிறது.
ஏ.சியில் பயன்படுத்தப்படும் வாயு துர்நாற்றமோ, வித்தியாசமான மணமோ கொண்டதல்ல என்பதால், உங்கள் வீட்டு ஏ.சியில் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிவது சற்று கடினமானதே. ஆனால், சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், ஏ.சியில் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
- ஏ.சி சரியாக பொருத்தப்படவில்லை என்றால்
- வாயு செல்லும் குழாயில் அடைப்போ, வளைவோ இருந்தால்
- பழைய ஏ.சியின் குழாயில் துருப்பிடித்திருந்தால்
- ஏ.சி வழக்கமான குளிர்வுத்தன்மையை கொடுக்காவிட்டால்
வீட்டில் ஏ.சி இருந்தால் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்
- முறையாக ஏ.சியை சர்வீஸ் செய்யவும்
- நம்பிக்கைக்குரிய, தரமான மெக்கானிக்கிடம் ஏ.சி சர்வீஸ் செய்யவும்
- விண்டோ ஏ.சியைவிட ஸ்பிளி ஏ.சி சிறந்த்து
- வாயுவின் தரத்தில் கவனம் செலுத்தவும்
- தவறான வாயுவை ஏ.சியில் நிரப்பினாலும் ஆபத்து ஏற்படலாம்
ஏ.சி பயன்படுத்தும்போது கதவு சன்னல்களை மூடி வைத்திருக்கவேண்டியிருக்கும். இருந்தாலும், தினசரி சிறிது நேரமாவது கதவு, சன்னல்களை திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
"அறையின் சன்னல்கள் அல்லது கதவுகளைத் திறக்கும்போது ஏ.சியை நிறுத்த மறக்கவேண்டாம். இல்லாவிட்டால் உங்களது மின்சார கட்டணம் ஷாக் அடிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கும். காலையில் ஏ.சியை நிறுத்திய பிறகே, சன்னல் மற்றும் கதவுகளை திறக்கவும்" என்கிறார் சோம்வம்ஷி.
ஏ.சியின் தட்பநிலையை எந்த டிகிரியில் வைக்கலாம்?
படுக்கையில் படுத்துக்கொண்டோ, சோபாவில் உட்கார்ந்திருக்கும்போதோ ஏ.சி ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு தட்பநிலையை 16 டிகிரி அல்லது 18 டிகிரியாக மாற்றும் விளையாட்டில் ஈடுபடுபவரா?
அது உங்கள் உடல்நலத்தை பாதிக்கலாம், கையையும் கடிக்கலாம் என்கிறார் சோம்வம்ஷி.
வீடோ, அலுவலகமோ 25-26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வைப்பது நல்லது. பகலைவிட இரவு நேரத்தில் தட்பநிலையை குறைவாகவே வைக்கலாம். இதுபோன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தினால் மின்சார கட்டணம் கையைக் கடிக்காது, தலைவலியும், உடல் சோர்வும் ஏற்படாது.
அதுமட்டுமல்ல, முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு திறன் பலவீனமாக இருக்கும் என்பதை கவனத்தில் வைத்து, அவர்கள் இருக்கும்போது, ஏ.சியின் தட்ப நிலையை அதிகரிக்கலாம்.
நாளொன்றுக்கு எத்தனை மணி நேரம் ஏ.சியை பயன்படுத்தலாம்?
ஏ.சி எத்தனை மணி நேரம் பயன்படுத்தலாம்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் CSEயின் திட்ட மேலாளர் அவிகல் சோம்வம்ஷி, "வெளிவெப்பம் நேரடியாக உள்ளே வராதது போல் உங்கள் வீடு அமைந்திருந்தால், அறை குளுமையாகும் வரை ஏ.சியை இயக்கிவிட்டு, பிறகு அதை அணைத்துவிடலாம். ஏ.சியிலேயே 24 மணிநேரமும் இருப்பது என்பது ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். நாம் இருக்கும் அறை எப்போதுமே மூடியிருந்தால், குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு, அறைக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். வெளிக்காற்று அறைக்குள் வருவது அவசியம்" என்று சொல்கிறார்.
சன்னல்களும், காற்று வருவதற்கான வாய்ப்புகள் கொண்ட இடங்களில் மட்டுமா ஏ.சி பயன்படுத்தப்படுகிறது? கண்ணாடிச் சுவர்களை கொண்ட, சன்னல்களே இல்லாத, கழிவறைகள் உட்பட எல்லா இடங்களும் முழுமையான குளிர்வூட்டப்பட்ட பெரிய கட்டடங்களிலும், அலுவலகங்களிலும் ஏ.சி இருக்கிறது. உங்கள் அலுவலகத்தில் முழுமையான ஏ.சி செய்யப்பட்டிருந்தால், பல முறை நடுக்கம் ஏற்படுத்தும் குளிரையும் உணர்ந்திருக்கிறீர்களா? சில அலுவலகங்களில் ஏ.சியை எந்த அளவில் வைப்பது தொடர்பான சர்ச்சைகளையும் காணலாம்.
அலுவலகங்களில் ஏ.சியின் தட்பம் குறைவாக வைக்கப்படுவது ஏன்?
அலுவலகத்தில் வழக்கத்தைவிட குறைவாகவே ஏ.சியின் தட்பநிலை வைக்கப்படுவதை சுட்டிக்காட்டும் சோம்வம்ஷி, ''இது வெளிநாட்டில் இருந்து நாம் பெற்ற மனோபாவம். குளிர் பிரதேசங்களில் வசிக்கும் அவர்களுக்கு அதிக குளிர் உகந்ததாக இருக்கலாம். ஆனால் வெப்ப மண்டல நாடான இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அதிக அளவிலான குளிர் தேவையில்லை, வேர்த்துப் போகாத உடலுக்கு ஏற்ற தட்பம் இருந்தால் போதும். அதிக குளுமை, உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். தும்மல் வரும், தலைவலி வரும். அலுவலகங்களிலும் ஏ.சியின் அளவை போதுமான அளவு பராமரித்தால், பணியின் தரமும் மேம்படும், மின்சார கட்டணமும் குறையும்.''
அலுவலகங்களில் தட்பத்தை அதிகமாக வைப்பதற்கு காரணம் மனிதர்கள் மட்டுமல்ல, இயந்திரங்களின் பாதுகாக்கவும்தான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் சோம்வம்ஷி. தொடர்ந்து பல மணி நேரங்கள் இயங்கும் இயந்திரங்களால் வெப்பம் அதிக அளவில் வெளியாகும் என்பது ஒருபுறம், அதிக வெப்பத்தால் இயந்திரங்கள் விரைவில் பழுதடையாமல் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஒரு காரணம் என்கிறார் அவர்.
முற்றிலும் ஏ.சி செய்யப்பட்ட அலுவலகங்களில் காற்றோட்டம் முற்றிலுமாக தடைபட்டால் அதை, 'sick building syndrome' என வெளிநாட்டினர் குறிப்பிடுவார்கள் என்பதையும் நினைவூட்டுகிறார் சோம்வம்ஷி.
பெரிய அலுவலகங்களில் மையப்படுத்தப்பட்ட ஏ.சி (centralised Air conditioning system) பொருத்தப்பட்டுள்ளது, அதன் மூலமாக காற்று வரும்.
அலுவலகத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது அங்கும் இங்கும் சென்று வருவதால் அவர்களுக்கு வெளிக்காற்று கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மையப்படுத்தப்பட்ட ஏ.சி இருக்கும் அலுவலகங்களில், அவை அவ்வப்போது சுத்தப்படுத்தப்படுகிறதா, சர்வீஸ் செய்யப்படுகிறதா என்று தெரிந்துக் கொள்ளவேண்டும் என CSE அறிவுறுத்துகிறது. ஏனெனில் காற்று வரும் வழியில் குப்பையோ, எதாவது தடைகளோ ஏற்பட்டால், அப்போது குளிர் காற்று உங்களுக்கு விளைவிக்கும் தீங்கின் அளவு அதிகரிக்கும்.
ஏ.சியின் தட்ப டிகிரியை தீர்மானிக்கும் அரசுகள்
24 டிகிரி செல்சியஸில் ஏ.சி இயக்கப்பட்டால், போதுமானது, அது மின்சாரக் கட்டணத்தை சேமிக்கவும் உகந்தது என்று இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எரிசக்தி அமைச்சகம் அறிவுறுத்தியது.
அடுத்த ஆறுமாதங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நட்த்தப்படும் என்றும், பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவிக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 20 பில்லியன் யூனிட் மின்சக்தி சேமிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக அரசு கூறுகிறது.
இந்தியாவைப் போன்றே, உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற தட்பநிலையை பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சோம்வம்ஷி கூறுகிறார்.
- சீனா:26
- ஜப்பான்: 28
- ஹாங்காங்: 25.5
- பிரிட்டன்: 24
இந்தியா போன்ற காலநிலை உள்ள நாட்டில் 26 டிகிரி செல்சியஸில் ஏ.சி செயல்படுவது உகந்தது என்பதே சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
Post a Comment
Post a Comment