காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.
ஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
சௌதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றை சௌதி மன்னர் சல்மான் அமைத்துள்ளார்.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.
துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் உடன் இந்த விவகாரம் தொடர்பாக மன்னர் சல்மான் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலுக்கு பிறகு அவர் இறந்ததாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முன்னனதாக, ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடியது.
அவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியிருந்தது.
சௌதி அரசு தொலைக்காட்சி கூறுவது என்ன?
ஜமால் கசோஜி துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்தது.
துருக்கியில் இன்னும் தொடரும் இந்த விசாரணையில் இதுவரை 18 சௌதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முரண்படும் தகவல்கள்
கசோஜி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டது என்று இந்த வழக்கை விசாரித்து வரும் துருக்கி அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.
- செளதி அரேபியா - அமெரிக்கா முரண்: எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
- ஜமால் கசோஜி: காணாமல் போன பின்லேடனை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்
ஆனால் கசோஜி மாயமான 17 நாட்களுக்கு பிறகு, அவர் அதிகாரிகளுடனான சண்டையைத் தொடர்ந்து இறந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள சௌதி அரசு தெரிவித்துள்ள கூற்று வேறு மாதிரியாக உள்ளது. அதாவது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை அல்ல என்பதை நிறுவ சௌதி முயல்கிறது.
சௌதி அரசுடன் மிகவும் நட்புடன் இருக்கும் மேற்கு நாடுகள் இந்த விவகாரத்தில் சௌதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் லேன்ஸ்டேல்.
யார் இந்த ஜமால் கஷோஜி?
செளதி இளவரசர் மொஹமத் பின் சல்மானை விமர்சிப்பவர்களில் செய்தியாளர் ஜமால் முக்கியமானவர். இவருக்கு 58 வயது. அல்-வடான் நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்த இவர், சில சௌதி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி உள்ளார்.
சௌதி அரச குடும்பத்துடன் பல ஆண்டுகள் ஜமால் நெருக்கமாக இருந்தார். சௌதியின் மூத்த அதிகாரிகளுக்கு ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார்.
ஜமாலின் நண்பர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அல்-ஹயாத் நாளிதழுக்கு சிறப்பு கட்டுரை எழுதுவது நிறுத்தப்பட்டது. பின்னர், அமெரிக்காவுக்கு சென்ற ஜமால், வாஷிங்டன் போஸ்டில் எழுதி வந்தார். மேலும் பல அரபு மற்றும் மேற்கத்திய தொலைக்காட்சிகளில் பேசியும் வந்தார்.
ஜமாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர் எழுதி வரும் பத்திக்கான இடத்தை காலியாகவிட்டு, அக்டோபர் 5ஆம் தேதிக்கான பாதிப்பை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டது.
துணைத் தூதரகம் சென்றது எதற்கு?
ஜமால் தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சான்றிதழ் வாங்க சௌதி தூதரகத்திற்கு சென்றார். ஹெடிஸ் செஞ்சிஸ் என்ற துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்திருந்தார்.
தூதரகத்திற்கு வெளியே ஹெடிஸ் 11 மணி நேரங்கள் காத்திருந்தும் ஜமால் வரவில்லை. தூதரகத்தினுள் செல்லும் முன், செல்பேசியை வெளியே கொடுப்பது அவசியம் என்பதால், ஜமால் செல்பேசி இல்லாமல்தான் உள்ளே சென்றார் என ஹெடிஸ் கூறியிருந்தார்.
தூதரகத்திற்கு வெளியே காதலியிடம் செல்பேசியை கொடுத்துவிட்டு சென்ற அவர், தான் திரும்பி வராவிட்டால், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
Post a Comment
Post a Comment