இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விடயங்களில் ஒன்றுபட்டுள்ளனர்.
காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம்.
ஆனால், 700 கோடி பேரில் இந்த ஆறு பேரின் வாழ்க்கைமுறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை. அவர்களது தினசரி செயல்பாட்டை இந்த கட்டுரையில் காண்போம்.
தூக்கத்திலிருந்து விழித்தல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தூங்குவதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பைக்குள் விண்வெளி வீரர்கள் இரவு முழுவதும் மிதந்துக்கொண்டே தூங்குகிறார்கள். காலை ஆறு மணிக்கு தானாக எரியும் விளக்குகளை சமிக்ஞையாக கொண்டு வீரர்கள் தூக்கத்திலிருந்து எழுகிறார்கள்.
தூங்கி எழுந்தவுடன் கழிவறைக்கு செல்வது, பல் தேய்ப்பது என வீரர்களின் வாழ்கைப்போக்கு பூமியிலுள்ளவர்களை ஒத்துக் காணப்படுகிறது. வீரர்கள் பற்பசை மற்றும் பல் துலக்கியை பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள் - அவை ஓடத்தில் மிதந்துகொண்டே இருக்கும்.
- ரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு: விண்வெளி வீரர்கள் தப்பியது எப்படி?
- சர்வதேச விண்வெளி மையத்தில் காற்று கசிவு
அதற்கடுத்து, சிறிது காலையுணவை சாப்பிட்டுவிட்டு, ஓடத்தின் கீழுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் குறித்து திட்டமிடும் கூட்டத்திற்காக ஆறு வீரர்களும் கூடுவார்கள்.
பராமரிப்பு
தங்களது பெரும்பாலான நேரத்தை சர்வதேச விண்வெளி ஓடத்தின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தை நிர்வகிப்பதிலேயே விண்வெளி வீரர்கள் செலவிடுகிறார்கள். அதைவிடுத்து ஓடத்தை சுத்தம் செய்வதற்கு, பொருட்களை இடமாற்றம் செய்வதற்கு ஒருநாளும், ஓடத்தின் காற்று சுத்திகரிப்பு கருவி உள்ளிட்ட முக்கிய கருவிகளில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கு மற்றொரு நாளையும் செலவிடுகிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அதை சரிசெய்வது குறித்தும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள குறிப்பை முதலாக கொண்டே விண்வெளி வீரர்களின் முழு செயல்பாடும் அமைந்துள்ளது.
வீரர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே விண்வெளியில் மிதந்துக்கொண்டே இருக்குமென்பதால், புதியதாக இங்கு வரும் வீரர்கள் தாங்கள் வைத்த பொருட்களை கண்டுபிடிப்பதிலேயே தொடக்க நாட்களை செலவிடுவார்கள்.
மிதக்கும் உடற்பயிற்சி கூடம்
விண்வெளி வீரர்கள் எப்போதும் மிதந்துகொண்டே இருப்பார்கள் என்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும் உள்ளார்கள்
என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது முற்றிலும் தவறு. விண்வெளி வீரர்களுக்கு நீண்டகாலத்தில் பல்வேறுவிதமான உடல்நல கோளாறுகள் ஏற்படும்.
பூஜ்ய ஈர்ப்பு விசையில் மனிதர்கள் குறிப்பிட்ட காலத்தை செலவிடும்போது ஏற்படும் உடல்ரீதியான பிரச்சனைகள் குறித்து ஆராய்வது சர்வதேச விண்வெளி நிலையத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் பயன்படுத்தப்படும்.
ஈர்ப்பு விசையற்ற சூழலில் வாழ்வதால் விண்வெளி வீரர்களின் எலும்புகள் உடையக்கூடிய தன்மையை அடைவதாகவும், தொடர்ந்து உடலை நகர்த்திக்கொண்டே இருக்கும்போது தசைகள் வலிமையற்று போவதாகவும் தெரியவந்துள்ளது.
- சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் 'வினோத விண்கல்'
- விண்வெளி செல்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விடயங்கள்
மேற்குறிப்பிட்டுள்ள உடல்ரீதியான பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு விண்வெளி வீரரும் அங்கேயே அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் உடற்பயிற்சி கூடத்தில் ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள்.
மதிய உணவு
பூமியில் இருப்பவர்களை போன்றே விண்வெளி வீரர்களின் வாழ்க்கையும் வார நாட்கள், வார இறுதி நாட்கள் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி இரண்டு பேர் சேர்ந்தோ, சிறு குழுவாகவோ பணியாற்றுகிறார்கள்.
வார நாட்களில் எப்போதாவது ஒருமுறைதான் அனைத்து வீரர்களும் ஒன்றாக மதிய உணவு உண்ணுகிறார்கள். வார இறுதிகளில் அனைத்து வீரர்களும் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டு உண்ணுகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணிபுரிகிறார்கள் என்பதால், அவர்களுக்கான உணவிலும் பெரும் வேறுபாடு நிலவுகிறது. உதாரணத்துக்கு, ரஷ்ய விண்வெளி வீரர்கள் டின்களில் அடைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதற்கு முன்பு சூடுபடுத்திவிட்டு உண்ணுகின்றனர்.
பூமியில் இருப்பதைப்போன்றே தக்காளி சாஸ், கடுகு, மிளகாய் போன்றவை இங்கும் உள்ளது. ஆனால், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றின் துகள்கள் ஓடத்தில் மிதக்கும் என்பதால் நீர்மநிலையில் அடைக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு முறை சர்வதேச விண்வெளியத்திற்கு பூமியிலிருந்து பொருட்கள் கொண்டுசெல்லப்படும்போது வீரர்களுக்கு பழங்களும் எடுத்துச்செல்லப்படுகின்றன. பூமியை விட விண்வெளியில் பொருட்கள் விரைவில் கெட்டுவிடும் என்பதால் வீரர்கள் பழங்களை உடனடியாக உண்டு விடுகின்றனர்.
- இஸ்ரோவில் புதிய உச்சத்தை தொடப்போகும் பெண்
- தெற்காசிய செயற்கைக் கோள் - இந்தியாவின் `விண்வெளி ராஜதந்திரம்`
ஒரே வேலையை தொடர்ந்து முற்றிலும் வேறுபட்ட சுற்றுசூழலில் மேற்கொள்வது வீரர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் என்பதால், பழங்களை அனுப்புவதும், குழுவாக சாப்பிடுவதும், சிறப்பு தினங்களை கொண்டாடுவதும் வீரர்களின் மனவுறுதியை பேணும் முக்கியமான விடயங்களாக கருதப்படுகின்றன.
பரிசோதனைகள்
பூமியில் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதைவிட, விண்வெளியில் பூஜ்ய ஈர்ப்பு விசையில் தனித்துவமான முறையில் ஆராய்ச்சி செய்வதற்காகவே சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரரொருவர் அனுப்பப்படுவதற்கு முன்னர், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், பரிசோதனைகள், கருவிகள் செயல்பாடு குறித்து பூமியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விண்வெளி கூடத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. ரஷ்யாவிற்கு சொந்தமாக இரண்டு சிறிய ஆராய்ச்சி கூடங்களும், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் உள்ளன.
விண்வெளியிருந்து பூமியை படம் பிடிப்பது, தரவுகளை திரட்டுவது உள்ளிட்ட பணிகளோடு, ஒருசெல் உயிரிகள், எலிகள், எறும்புகள், மீன், புழுக்கள் ஆகியவற்றை பூஜ்ய ஈர்ப்பு விசையில் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருங்கால விண்வெளி தேடலுக்கு சோதனை கூடமாகவும் இது விளங்குகிறது.
மறக்கமுடியாத அனுபவம்
சர்வதேச விண்வெளி நிலையத்தை பொறுத்தவரை வீரர்களின் செயல்பாடு பெரும்பாலும் ஓடத்தின் உள்ளேதான் இருக்கும் என்றாலும், தவிர்க்க முடியாத சில சமயங்களில் வீரர்கள் ஓடத்தின் வெளியே சென்று பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளும் மறக்கமுடியாத அனுபவத்தை வீரர்கள் பெறுவார்கள்.
இதுபோன்ற ஆபத்தான பணிகள் குறித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திட்டமிடப்படுகிறது. ஒரு வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பகுதியில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்வதற்காக வெளியே செல்வதற்கு முன்னதாக பிரத்யேக ஆடைகளை உடுத்திக்கொண்டு, கிட்டத்தட்ட 100 பக்கங்களை கொண்ட பாதுகாப்பு வழிமுறைகளை சார்பார்ப்பதற்கு நான்கு மணிநேரங்கள் ஆகும். அதுமட்டுமில்லாமல், பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபோன்ற பணிகளை இரண்டு வீரர்கள் மேற்கொள்கிறார்கள்.
- '2022க்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவார்கள்': என்ன சொல்கிறார் ராகேஷ் ஷர்மா?
- உயிருக்கு ஆபத்தானதா விண்வெளி பயணம்-
ஒருமுறை இதுபோன்ற பணிகளுக்காக விண்வெளி வீரர்கள் வெளியே சென்றால் அதிகபட்சமாக எட்டு மணிநேரத்தை செலவிடுவார்கள். இதற்காக வீரர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு முன்னர் பூமியில் மிகப் பெரிய நீர்த்தொட்டியில் வைக்கப்பட்டுள்ள மாதிரி ஓடத்தில் பயிற்சி எடுக்கிறார்கள்.
ஓய்வு நேரம்
ஒவ்வொரு தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை முடிந்தபின்பு மீதமுள்ள நேரத்தை தங்களது விருப்பம் போல் செலவிட்டுக்கொள்வதற்கு வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துகொண்டே தங்களது குடும்பத்தினருக்கு போன் செய்யலாம்; மின்னஞ்சல் அனுப்பலாம்; திரைப்படங்களும் பார்க்க முடியும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் ட்ராங்குலிட்டி என்னும் பகுதியிலிருந்து கண்ணாடி வழியாக விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது விண்வெளி வீரர்களின் பொதுவான பொழுதுப்போக்காக உள்ளது. அதுமட்டுமின்றி, பூமியின் ஆச்சர்யமளிக்கும் வடிவத்தையும், அதிலுள்ள குறிப்பிட்ட நகரங்கள், காடுகள் குறித்த புகைப்படங்களையும் வீரர்கள் எடுக்கிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கிட்டார் வாசித்ததுடன், இசை காணொளி ஒன்றையும் தயாரித்த கிறிஸ் ஹாட்பீல்டு என்ற விண்வெளி வீரர் இதுநாள் வரை பிரபலமானவராக அறியப்படுகிறார்.
Post a Comment
Post a Comment