இமய மலையில் வீசிய பனிப்புயலால் நேபாளத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குர்ஜா சிகரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த மலையேறிகளில் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மலையேற்றக் குழுவினரும், நேபாளைச் சேர்ந்த நான்கு வழிகாட்டிகளும் குர்ஜா சிகரத்திலுள்ள முகாமில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர்.
கடுமையான வேகத்தில் வீசிய பனிப்புயல் அவர்களின் கூடாரத்தைச் சேதப்படுத்தி பனிச்சரிவை உண்டாக்கியதால் அங்கிருந்தவர்கள் கொல்லபட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு சென்ற மீட்பு ஹெலிகாஃப்டர் அந்த இடத்தில் எட்டு மனித உடல்கள் இருந்ததை உறுதி செய்துள்ளது. எனினும் மோசமான வானிலையால் உடல்களை மீட்காமல் திரும்பியுள்ளது.
உடல் கண்டறியப்படாத ஒன்பதாவது நபரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
"ஐந்து தென்கொரிய மலையேற்றக் குழுவினர் இறந்துள்ளனர். மூன்று வழிகாட்டிகளும் இறந்துள்ளனர். நான்காம் வழிகாட்டியைக் காணவில்லை," என்று காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் தப்பா பிபிசியிடம் கூறினார்.
ஆக்சிஜன் உதவி இல்லாமலேயே உலகின் அதிக உயரமான முதல் 14 மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்த தென்கொரியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் கிம் சாங்-ஹோவும் உயிரிழந்தவர்களின் ஒருவர் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
"அவர்கள் தங்கியிருந்த முகாம் முழுதும் சேதம் அடைந்துள்ளது. இறந்த உடல்கள் அங்கு கிடப்பதை மீட்புப் பணியாளர்கள் கண்டுள்ளனர். வானிலை சீரடைந்தால் ஞாயிறன்று வேறு ஹெலிகாஃப்டர் அனுப்பப்படும்," என்று மியாகிடி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அலுவலரான லீலாதர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்த மலை ஏற்றத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், மலையேறிகளுடன் தொடர்ந்து 24 மணிநேரத்துக்கும் மேல் எவ்வித தகவல் தொடர்பும் இல்லாததால் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
7, 193 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில், சம்பவம் நடந்த முகாம், அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து சுமார் 3, 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமா?
1996க்கு பிறகு குர்ஜா சிகரத்தின் உச்சியில் இதுவரை யாரும் கால்பதிக்கவில்லை என்று இமய மலை தொடர்பான தரவுகளை பதிவு செய்யும் இமாலயன் தரவுதள (Himalayan Database) ஆவணம் தெரிவிக்கிறது.
நேபாளத்தில் அமைத்துள்ள உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 8000க்கும் அதிகமானவர்கள் ஏறியுள்ளனர். ஆனால், இதுவரை குர்ஜா சிகரத்தை அடைந்தவர்கள் வெறும் 30 பேர் மட்டுமே.
Post a Comment
Post a Comment