பஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழப்பு




அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தசரா கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, தீமையை நன்மை வெற்றி கொள்வதை குறிக்கும் வகையில், ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால், தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவ்வழியாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு ரெயில் வந்து கொண்டிருந்தது.

தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆர்வ மிகுதியால் அங்கேயே இருந்தனர். மேலும் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ரெயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான் தெரிந்தது. ஆனால், தப்பிக்க வழி இல்லாததால், கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அடுத்த நொடியில், அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


சம்பவத்தை தொடர்ந்து, சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். விபத்து காரணமாக, அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட சென்ற மாநில கல்வி மந்திரி ஓ.பி.சோனியை பொதுமக்கள் தாக்கினர்

ரெயில் விபத்து பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். தண்டவாளம் அருகே உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து இந்த விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார். 

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேசமயம், விபத்து தொடர்பாக ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டத் தொடங்கி உள்ளன. 

ரெயில்வே தண்டவாளம் அருகே தசரா விழாவிற்கு அனுமதி அளித்த அரசுதான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்து நடந்ததும் சிறப்பு விருந்தினர் நவ்ஜோத் கவுர் அந்த இடத்தைவிட்டு சென்றது தவறு என்றும் குற்றம்சாட்டுகின்றனர். 

நடந்த சம்பவத்திற்கு மாநில அரசு தான் முழு  பொறுப்பு என்றும், நிர்வாகம் மீது பல்வேறு கேள்விகள் எழுவதால் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்  மத்தியமந்திரியும் அகாலி தளம் தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் வலியுறுத்தி உள்ளார். மாநில அரசு சரியாக செயல்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

முறையாக அனுமதியில்லாமல் காங்கிரஸ் கட்சி இந்த விழாவை நடத்தியதாக சில தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி  தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வலியுறுத்தி உள்ளார். #PunjabTrainAccident #Dussehra #SidhuWife