இந்தியாவின் தேசத் தந்தை மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று.
இந்தியர்கள் அனைவரும் இந்த நாளை கொண்டாடுகின்றனர். தேசத் தந்தை, மகாத்மா, அஹிம்சா மூர்த்தி என பல்வேறு அடைமொழிகளால் அன்புடன் அழைக்கப்படும் அவர், வெறும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக, ஒரு வழக்கறிஞராக 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தார்.
இன்றும் அவரது உற்றார் உறவினர்கள், அவர்களது சந்ததியினர் அங்கு வசிக்கின்றனர். தான் பிறந்த நாட்டில் மக்களால் தேசத்தந்தையாக காந்தி மதிக்கப்படுவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்த நாடு தென்னாப்பிரிக்கா.
காந்தியின் ஐந்தாம் தலைமுறை விழுதுகள் தென்னாப்பிரிக்காவில் வேரூன்றிவிட்டனர். அவர்கள் தங்கள் எள்ளுத் தாத்தாவைப் பற்றியும் அவரது அஹிம்சை, சிந்தனைகள் பற்றியும் என்ன நினைக்கின்றனர்?
பிபிசி யின் சிறப்பு நேர்காணல் தென்னாப்பிரிக்காவில் இருந்து...
டர்பன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற பெரிய நகரங்களில் காந்தியை யாரும் மறப்பது எளிதல்ல. இங்கே ஒரு சில சாலை சந்திப்புகளுக்கும், முக்கிய சாலைகளுக்கும் காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. காந்தியின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன; காந்தியின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், காந்தி தென்னாஃபிரிக்காவில் வசித்த நினைவுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
டர்பனில் காந்தியின் பாரம்பரியம்
1893ஆம் ஆண்டு தென்னாப்பிரிகாவுக்கு வந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1914ஆம் ஆண்டு இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பினார்.
காந்தி இங்கு வசித்தபோது குடியிருந்த, டர்பன் நகரின் ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான இந்திய வம்சாவளியினர், காந்தியின் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
- `கணவர்களின் பாலியல் இச்சையை பெண்கள் எதிர்க்க விரும்பிய காந்தி'
- காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள்
1903ஆம் ஆண்டு ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் ஒன்றை உருவாக்கினார் என்று தனது தாத்தாவின் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார் காந்தியின் பேத்தி இலா காந்தி. காந்தியின் ஆளுமையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட இடம் இது என்று அவர் கூறுகிறார்.
சத்தியாகிரக சித்தாந்தம் முதல் கூட்டு வீடுகள், தங்களுடைய வேலையை தாங்களே செய்வது, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது (மண்பாண்டங்களை பயன்படுத்துவது, நீர் பாதுகாப்பு போன்றவை) போன்ற கருத்துக்கள் ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் காந்தி ஆசிரமத்தில் உருவாகி, மேம்படுத்தப்பட்டவை.
பாரிஸ்டர் என்ற முறையில் இங்கு கோட்டு-சூட்டு டை என்ற அலங்காரத்தில் வந்தார் காந்தி. வெள்ளையர்கள் மற்றும் இந்திய வம்சாவழி மக்கள் என பலதரப்பினரும் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
இந்த ஆசிரமத்தை உருவாக்கி, இங்கே குடியேறுவதற்கு முன், காந்தி ஆங்கிலேயர்களின் பாணி வாழ்க்கை முறையை பின்பற்றினார். கையில் உணவு உண்ணாமல் ஸ்பூன், ஃபோர்க் போன்றவற்றை பயன்படுத்துவார்.
உள்ளூரில் வசித்த கருப்பின மக்களிடமிருந்து காந்தி விலகி நின்றதால், அவரை சில விமர்சகர்கள் இனவாதி என்றும் அழைக்கின்றனர்.
காந்தியை இனவாதி என அழைத்தது ஏன்?
காந்தி தென்னாப்பிரிக்கா வந்தபோது அவருக்கு 24 வயதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் காந்தியின் பேத்தி 78 வயது இலா காந்தி.
இங்கிலாந்தில் சட்டப்படிப்பு பயின்ற காந்தி, அப்போது வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தார். உலக அனுபவங்களே அவரது சிந்தனையை மாற்றின. எனவே வாழ்க்கையின் இளமைப் பருவத்தில் கூறிய கருத்துக்களை வைத்து காந்தியை எடை போடமுடியாது என்கிறார் இலா காந்தி.
1940ஆம் ஆண்டு இந்த ஆசிரமத்தில்தான் இலா காந்தி பிறந்தார். அப்போது மழை பெய்துக் கொண்டிருந்தாலும் தானே வண்டியோட்டிக் கொண்டு என்னை பார்க்க வந்தார் தாத்தா என்று தனது பிறந்தநாளைப் பற்றி குறிப்பிடுகிறார் இலா.
இனப் பாகுபாடு காட்டியவர் காந்தி என்ற குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு பதிலளித்த இலா காந்தி, "அவர் இளைஞராக இருந்தபோது கூறிய இரு கருத்துகளின் அடிப்படையில்தான் அவர் இன ரீதியாக பாகுபாடு காட்டுபவர் என்ற தவறான கருத்து உருவாகியது."
எங்களுடன் பேசிக்கொண்டே, ஒரு காலத்தில் குடும்பத்தின் சமையலறையாக இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார் இலா. தற்போது அந்தக்காலத்தில் வசித்த இந்த வீடு முழுவதுமே அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுவிட்டது.
சுவரில் காணப்படும் காந்தியின் சில சுவாரஸ்யமான கருத்துக்களை சுட்டிக் காட்டிய இலா காந்தி "இந்த வரிகளைப் பாருங்கள், இதைப் பார்த்து, தாத்தாவை இனவாதி என்று சொல்கிறார்கள், ஆனால் வேறு சில கருத்துக்களைப் பாருங்கள், அது, அவர் இனவாத கருத்தை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை தகர்க்கும்" என்று சொன்னார்.
காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் மகள் எலா காந்தி. காந்தியின் மிகப்பெரிய சீடரான இலா, சமூக சேவகராக செயலாற்றி வருகிறார். பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இலா, முன்னாள் எம்.பி. என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது ஏழு வயதில் தாத்தாவின் மடியில் விளையாடிய இலா, காந்தியின் அமைதிக்கான சமூகப் பணியை தென்னாப்பிரிக்காவில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.
இலாவின் மூத்த சகோதரி சீதா துபேலியா, தனது இறுதி மூச்சு வரை காந்தியின் கருத்துக்களை பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகள் கீர்த்தி மேனன் மற்றும் மகன் சதீஷ் காந்தி ஆகியோர் குடும்பத்தின் நான்காவது தலைமுறையினர்.
தொடர்ந்து அதிகரித்துவரும் வன்முறை மற்றும் இந்தியாவில் சமுதாயத்தில் அதிரித்து வரும் பிரிவினை பற்றி வருந்தும் கீர்த்தி மேனனையும் சந்தித்தோம்.
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி முதல் தலைமுறை என்றால், அவரது மகன் மணிலால் இரண்டாம் தலைமுறை. மணிலாலின் மகள் இலா காந்தி, இலாவின் சகோதரி சீதா துபேலியா ஆகியோர் மூன்றாம் தலைமுறையினர். சீதா துபேலியாவின் பிள்ளைகள் கீர்த்தி மேனன் மற்றும் சதீஷ் காந்தி குழந்தைகள் காந்தியின் நான்காம் தலைமுறையினர். இவர்களின் பிள்ளைகளான ஐந்தாவது தலைமுறையினரை சந்தித்தோம்.
இவர்கள் தென்னாப்பிரிக்காவின் டர்பன், கேப் டவுன் மற்றும் ஜொஹானஸ்பெர்க் போன்ற நகரங்களில் வசிக்கின்றனர்.
டர்பனில் கீர்த்தி மேனனை சந்தித்தோம்.
எள்ளுத் தாத்தாவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
காந்தி பற்றி பல பாட புத்தகங்களில் படிக்கமுடியும். அவரது அடுத்தடுத்த தலைமுறையினரைப் பற்றி ஊடகங்களில் தெரிந்துக் கொள்ளமுடியும். ஆனால் காந்தியின் ஐந்தாவது தலைமுறையைப் பற்றிய தகவல்களை பாடப் புத்தகங்களிலோ அல்லது வெறெந்த ஊடகங்களிலோ காணமுடியாது.
ஏனெனில் இவர்கள் ஊடகங்களின் வெளிச்சங்களுக்கு அப்பாற்பட்டு, இயல்பான எளிய வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர்.
எளிமையாக, மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கையை இவர்கள் வாழ்கின்றனர்.
காந்தியின் பேத்தியின் பேரக்குழந்தைகளான மூவருக்கும் சில விஷயங்கள் பொதுவானதாக இருக்கின்றன: அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள், நன்றாக பேசுகிறார்கள். காந்தியின் குடும்ப வாரிசுகள் என்றாலும், அதை தவறாக பயன்படுத்துவதில்லை. நேர்மையான காரியத்தை செய்வதற்கு ஒருபோதும் அச்சப்படுவதில்லை.
27 வயது கபீர் துபேலியா, டர்பனில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார்.
கபீரை விட 10 வயது மூத்தவரான மிஷா துபேலியா, உள்ளூர் வானொலி நிலையத்தில் தகவல் தொடர்பு நிர்வாகியாக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும், கீர்த்தி மேனனின் சகோதரர் சதீஷின் பிள்ளைகள்.
இவர்களின் ஒன்று விட்ட சகோதரி சுனீதா மேனன் கீர்த்தி மேனனின் ஒரே வாரிசு. இவர் பத்திரிகையாளராக பணிபுரிகிறார்.
மூக்கு கண்ணாடி அணிந்து குறுந்தாடி வைத்திருக்கும் கபீரை பார்த்தால் மெத்தப் படித்தவர் போல் தோன்றுகிறது. மிஷா பார்ப்பதற்கு மிகவும் வயது குறைவானவராக தெரிகிறார். ஆனால், ஆழ்ந்த புரிதல் கொண்டவர். சுனீதா தனது வேலையில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
இவர்கள் தங்களை இந்தியர்களாக உணர்கிறார்களா அல்லது தென்னாப்பிரிக்க குடிமக்களாக உணர்கிறார்களா?
எங்களின் இந்த கேள்விக்கு, உடனே பதிலளித்த கபீர், "நாங்கள் தென்னாபிரிக்கர்கள்" என்று இயல்பாக கூறுகிறார்.
மிஷா மற்றும் சுனீதாவின் கருத்துப்படி, அவர்கள் முதலில் தென்னாப்பிரிக்கர்கள், பிறகுதான் இந்திய வம்சாவழியினர்.
இவர்கள் மூவரும் காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் வழித்தோன்றல்கள். 1914இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியாவுக்கு திரும்பியபோது, மணிலாலும் தந்தையுடனே வந்துவிட்டார். ஆனால் காந்தி அவரை டர்பனுக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார்.
1903ஆம் ஆண்டில் டர்பன் அருகே ஃபீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் ஆசிரமம் ஒன்றை உருவாக்கிய காந்தி, அங்கிருந்து "இண்டியன் ஒபீனியன்" என்ற பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். 1920இல் அந்த பத்திரிகையின் ஆசிரியராக மணிலால் நியமிக்கப்பட்டார். 1954ஆம் ஆண்டு மணிலால் இறக்கும்வரை அந்த பொறுப்பை அவரே வகித்துவந்தார்.
தங்கள் தாத்தா இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுவதும், உலகம் முழுவதும், அஹிம்சை, சத்தியகிரகம் போன்ற சித்தாந்தங்களின் தலைவராகவும் அறியப்படுவதும் தங்களுக்கு பெருமையாக இருப்பதாக இந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.
'காந்தி மனிதனாக பார்க்கப்பட வேண்டும்'
கபீரின் கருத்துப்படி, "தன்னுடைய கருத்துக்களை அமைதியான வழிகளில் எடுத்துரைத்தார்; அஹிம்சை தான் சரியான வழி என்று அவர் எடுத்த முடிவில் திடமாக இருந்தார் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய கால கட்டத்தில் அவரைப் போன்றவர்களை பார்க்கமுடியாது. காந்தி அஹிம்சை பற்றி கூறியவை அந்த சமயத்தில் பலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும்"
- காந்தி: பஞ்சாபில் 55 ஆயிரம் வீரர்களும், வங்கத்தில் ஒற்றை வீரரும்!
- காந்தியைப் படுகொலை செய்தது கோட்ஸே மட்டும்தானா?
காந்திய மரபுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இந்த பாரம்பரியம் சில நேரங்களில் தங்களுக்கு ஒரு சுமையாக மாறுவதாக அவர்கள் கருதுகின்றனர்.
"காந்தி ஒரு மனிதரை விட அதிகமாக மதிக்கப்படுகிறார். அவருடைய மரபின் அளவீட்டின் அடிப்படையில் அவரது பரம்பரையை சேர்ந்த நாங்கள் வாழவேண்டும் என்பதற்கான அழுத்தங்கள் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது" என்கிறார் சுனீதா.
"சமூக நீதி எனக்கு மிகவும் முக்கியமானது, கடந்த ஐந்து தலைமுறையாக காந்தி குடும்பத்தில் இந்த சிந்தனை தொடர்கிறது" என்கிறார் சுனீதா மேனன்.
தாங்கள் காந்தியின் குடும்பத்தினர் என்பதை நண்பர்களுக்கு பல காலம் வரை கூறியதே இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
"நான் வேண்டுமென்றேதான் காந்தி குடும்பத்தை சேர்ந்தவள் என்ற விஷயத்தை மறைத்துவைத்தேன்".
உண்மை தெரிந்தபோது நண்பர்களின் எதிர்வினை எப்படி இருந்தது என்று நாங்கள் கேட்டோம்.
"எங்கள் பின்னணி தெரிந்தபிறகு, அரசியலில் எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் மூலம் ஏன் என்பது புரிந்துவிட்டதாக என் நண்பர்கள் கூறினார்கள்" என்கிறார் சுனீதா. ஆனால் தனது குடும்ப பின்னணி நட்பில் எந்தவித மாறுதல்களையும் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
- காபி பிரியரா நீங்கள்? - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
- பங்குச் சந்தையில் ஒரே நாளில் 9200 கோடி ரூபாய் இழந்த இன்ஃபிபீம்
காந்தியின் போதனைகளை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காந்தி வாழ்ந்த காலகட்டம் வேறு, இன்று தாங்கள் வாழும் காலம் வேறு என்று கூறும் காந்தியின் வாரிசுகள், இன்றைய காலகட்டத்தில் காந்தியின் அனைத்து போதனைகளும் பொருந்தாது என்று கருதுகிறார்கள்.
தனது தாத்தா காந்தி உட்பட பல தலைவர்களின் தாக்கங்களும் தங்களுக்கு இருப்பதாக சொல்கிறார் சுனீதா.
இந்த இளைஞர்கள், காந்தியின் கண்மூடித்தனமான பக்தர்கள் அல்ல. காந்தியின் பல பலவீனங்களையும் பட்டியலிடுகிறார்கள். ஆனால் அவரது வாழ்க்கைச் சூழல் மற்றும் அந்தகால பின்னணியில் இருந்தே அவரை பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இந்தியாவில் காந்தியை பலர் விமர்சிப்பதை காந்தியின் பரம்பரையினர் அறிந்திருந்தாலும், அதைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. அவர் மிகப்பெரிய தலைவராக போற்றப்படுகிறார். அதுவும் தேசத்தந்தையாக மதிக்கப்படுகிறார். அவரை பலர் மதித்தாலும், சிலர் விமர்சனம் செய்வது இயல்பானதே என்று அவர்கள் கூறுகின்றனர்.
"அஹிம்சையை பின்பற்ற வேண்டுமானால் ஒருவர் காந்தியவாதியாக இருக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். காந்தியை முன்னுதாரணமாக கொண்டு அகிம்சைக்கு உத்வேகம் பெறலாம். காந்திய சிந்தனைக்கு எதிராக இல்லாதவர்களும், காந்தியை விமர்சிக்கலாம், அஹிம்சை பாதையை பின்பற்றலாம்."
காந்தியை விமர்சனம் செய்பவர்கள், இந்த காலச் சூழலோடு அவரை பொருத்திப் பார்த்து விமர்சிப்பது பொருந்தாது என்று முத்தாய்ப்பாக சுனீதா கூறுகிறார்.
Post a Comment
Post a Comment