மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப்டிடி (Hyperloop Transportation Technologies) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சல் மிக்கதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்து, கார், ரயில், விமானம் போன்றவற்றிற்கு அடுத்து மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைப்பர்லூப்டிடி என்ற நிறுவனம் தனது முதலாவது ஹைப்பர்லூப் வாகனத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. 32 மீட்டர்கள் நீளமும், 5 டன்கள் எடையும் கொண்ட இந்த வாகனத்தில் ஒரே சமயத்தில் 28 முதல் 40 பேர் பயணிக்க முடியும். மிகவும் முக்கியமாக இந்த வாகனம் மணிக்கு 1,223 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனம் பிரான்சிலுள்ள இந்நிறுவனத்தின் சோதனை கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும், வரும் ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவரும், இணை நிறுவனருமான பிபோப் க்ரேஸ்ட்டா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது இந்தியா, இந்தோனீசியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளிலும் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் மேலும் கூறுகிறது.
Post a Comment
Post a Comment