#WorldHeartDay உலக இதய தினம்




உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

மனிதர்களின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே மிக மிக முக்கியம். ஆனால், அதைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இதயத்துக்குதான். உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதியை உலக இதய தினமாக அனுசரித்துவருகின்றனர். இதயதினம் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணம், இதயநோய்குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தவே. 

இதயநோய்

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதயநோய், ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் பாதிக்கும். உலகம் முழுவதும் வருடத்துக்கு 1.79 கோடி பேர் இதய பாதிப்பால் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 24 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கின்றனர். 

இந்தியாவில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகித மரணம் மாரடைப்பால் மட்டுமே நிகழ்கின்றன. அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. 60 வருடங்களுக்கு முன்னர், 100-ல் இரண்டு பேருக்கு மட்டுமே இதய நோய் இருந்தது. இப்போது, 100-ல் 14 பேருக்கு இருக்கிறது. 2020-ல் இது 20 ஆக உயரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதய நோய் என்றதும், பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு மட்டும்தான் தெரிகிறது. தினமும் பரபரப்பாக வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், விளையாட்டு வீரர்களுக்கு கார்டியோமியோபதியும், வயதானவர்களுக்கு கரோனரி ஆர்ட்டரி ஃபெயிலியரும், குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை என எந்த வயதினருக்கும் இதய நோய் திடீரென ஏற்பட்டு விடுகிறது. 

இதய நோய்

உடலுக்குத் தேவையான அளவைவிட அதிக அளவு உணவை சாப்பிடுதல், தினசரி உடற்பயிற்சி செய்யாதது, அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதால் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும். இடது புற மார்பு மற்றும் தோள்பட்டைப் பகுதியில் வலி, தாடைப் பகுதியில் வலி, மார்பு இறுக்கம், அதிக ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ், புகைப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு, மயக்கம், தசை வலி, உடலில் எனர்ஜி இல்லாதுபோவது போன்றவை இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகள். 


இதய நோய்

இதய நோயாளிகள், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், வாரத்தில் ஐந்து நாள்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இரவில் எட்டு மணி நேரமும், மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரமும் தூங்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பின், அவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதிக எடையுள்ள கனமான பொருள்களைத் தூக்கக்கூடாது. கைகளை மூடியபடி, குனிந்தபடி செய்யவேண்டிய வேலைகளை முடிந்த அளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வாளிகளில் தண்ணீர் கொண்டு செல்லுதல், துணி துவைத்தல், பைக் ஓட்டுதல் போன்றவை. இவை, இதயத்துக்கு சுமையை அதிகரிக்கும். 

இதய நோய் வருவதற்கு புகைப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைப் பற்றியே குறை கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் வாழும் சுற்றுச்சூழலை யாரும் பொருட்படுத்துவது இல்லை. நாம் வாழும் இடம், பணிபுரியும் சூழல் என ஒவ்வொன்றும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.