பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேனின் மீது துப்பாக்கிச் சூடு




குருணாகல், பிலீகடை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் சுற்றிவளைப்பு ஒன்றின் போது வாகனத்தில் தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது அதனை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

போதைப் பொருள் வர்த்தகம் சம்பந்தமாக குருணாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (11) மாலை 06.00 மணியளவில் குருணாகல், பிலீகடை பிரதேசத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர். 

கண்டியிலிருந்து குருணாகல் பிரதேசத்தில் போதைப் பொருளை விநியோகம் செய்வதற்காக வந்திருந்த வேனை நிறுத்துமாறு பொலிஸார் கூறிய போதிலும் கட்டளையை மீறிச் சென்றதால் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேனின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனினும் வேனில் இருந்த ஏனைய மூவரும் இணைந்து வேனை நிறுத்தாது ஓட்டிச் சென்றுள்ளதுடன், பொலிஸ் அதிகாரி ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் மோதிக்கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.