”காளி கோவில் திருவிழா அல்ல.கைதிகளின் விடயம்“




மு.தமிழ்ச்செல்வன்  
அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கொழும்பில்   பிரமதமர், சம்பந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன்  என தீர்மானம் எடுக்க கூடியவர்கள் பலர் கூடி பேசிய போது அங்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.  இந்த நிலையில் பிரிதொரு தினத்தில் கூடி பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரிதொரு  தினத்தில் பேசுவதற்கு இதுவொன்றும் காளி கோவில் திருவிழா அல்லவென, தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர்நாயகம்  வீ. ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துக் கருத்துரைத்த அவர்,  கொழும்பில் சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்கள் தொடர்பில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை நேரில் நான் சந்தித்தேன்.
குறித்த கைதிகள் மிக நீண்ட காலமாக சிறையில் வாழ்கின்றனர். சிறையில் உள்ள அரசியல் கைதிகள் சட்டம் தொடர்பில் அதிகம் அறிந்துள்ளார்கள். கைதிகளாக உள்ளவர்கள் நீண்ட காலமாக இருந்தால் அவர்கள் ஒருவாரம் வீடு சென்று திரும்புவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாக கூறுகின்றனர்.
அவ்வாறு சட்டத்தில் இடம் உண்டு என்றால் அதை ஏன் இவர்கள் அனுபவிக்க முடியாதுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தை தூக்கி வைத்துக்கொண்டு இவர்களை ஏன் துன்பப்படுத்துகின்றீர்கள் என நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக இவர்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் சுமந்திரன், சம்பந்தன், பிரதம அமைச்சர், நீதி அமைச்சர் என பலர் கூடி பேசினர். ஆனால் அங்கு தீர்மானம் எடுக்க முடியாது போயுள்ளதாகவும், பிரிதொரு தினம் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அந்த கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்க கூடிய முக்கியத்தர்கள் இருந்தனர். ஏன் அவர்களால்  தீர்மானம் எடுக்க முடியவில்லை. 
பிரிதொரு திகதியிடப்பட்டு நாள் குறித்து செய்வதற்கு இது ஒன்றும் காளிகோவில் விழா அல்ல. திருமண சடங்குகளோ அல்ல. அப்பாவிகளின் உயிரோடு சம்மந்தப்பட்டது. இவ்வாறு தீர்மானம் எடுக்க முடியாத கலந்துரையாடல்களில் ஏன் ஈடுபடுகின்றீர்கள் எனவும் குறிப்பிட்டார்.