மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் குறிப்பிடத்தக்க எந்தக் கொள்கைகளும் இல்லை. அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அதனிடம் பொதுவான சின்னமும் இல்லை. முறைப்படி, கிரமமான கூட்டங்களை நடத்துவதும் இல்லை.
எமது மக்களின் தேவைகள், அபிலாசைகளை பிரதிபலிப்பதை கைவிட்ட ஒரு குழுவினால் இயக்கப்படுகிறது.
அவர்களின் நலன்கள் சுயசார்புடையவை. மக்களின் பங்களிப்புக்கு அங்கு இடமில்லை. தமிழ்த் தேசிய அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என்றோ, அது எனது எண்ணம் என்றோ நான் கூறவில்லை.
தற்போதைய எமது தமிழ்த் தலைமைத்துவத்தின் அபத்தங்களால், என் மீது அதிக சுமை சுமத்தப்படுவதாக உணர்கிறேன் என்று தான் நான் கூறினேன்.
மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது.
மக்களே எனக்காக முதலில் வந்தார்களே தவிர, கட்சிகள் அல்ல. மக்களே எனது எதிர்காலத்தை முடிவு செய்வார்களே தவிர வேறு எவராலும் அதனை செய்ய முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment