கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்ட நிலை,வைத்தியர்கள் வெளியேறியதால்




மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் 22 கர்ப்பிணித் தாய்மார்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது கடந்த வியாழக்கிழமை (06) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த நிலையில் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் மற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்களில் மாத்திரம் மகப்பேற்றிற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த 22 கர்ப்பிணித் தாய்மார்கள் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் மேலதிகமாக உள்ள கர்ப்பிணித்தாய்மார்கள் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் கடந்த வியாழக்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமையே குறித்த பிரச்சினைகளுக்கு காரணம் என தெரிய வருகின்றது. 

(மன்னார் நிருபர் லெம்பட்)