´மக்கள் பலம் கொழும்புக்கு´






கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வௌி இடங்களில் இருந்து பஸ்கள் மூலம் மக்கள் வருகைதந்த வண்ணமுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும் இன்று அலுவலக நாள் என்ற போதிலும் கொழும்பு நகர வீதிகள் நெரிசலற்று இருந்ததை அவதானிக்க முடிந்தது. 

இந்நிலையில் அலரி மாளிகை மற்றும் விஷேட மேல் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது. 

இந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து 18 பஸ்கள் வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 02 பஸ்களில் சுமார் 100 பேர் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார். 

அத்துடன் குருணாகலில் இருந்து சுமார் 750 பஸ்கள் வருகை தருவதாக முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் கூறியுள்ளதுடன், கண்டியில் இருந்து 186 பஸ்கள் வருகை தருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ கூறினார். 

எவ்வாறாயினும் இதுவரை கொழும்பில் எவ்வித போக்குவரத்து நெரிசலோ அல்லது ஏதாவது அசம்பாவிதங்களோ பதிவாகவில்லை என்று எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.